ஈரான் கப்பல் விவகாரத்தில் இலங்கை உதவியமை வரவேற்கத்தக்கது - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
கிராம மட்டத்திலிருந்து கட்சியை மீண்டும் பலப்படுத்தும் நோக்கில் புதிய செயற்குழுக்களை அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மத்திய கிழக்கு உட்பட உலகின் பல பிராந்திய ங்களிலும் இடம்பெற்று வரும் போர் நிலைமை தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. ஈரான் - அமெரிக்க விவகாரத்தில் எந்த தரப்பும் சார்பாக இலங்கை தீர்மானங்களை எடுக்கக் கூடாது. அவ்வாறு பக்கசார்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் நாமே பாதிக்கப்படுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் குழு கூட்டம் இடம்பெற்றது. கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது உலகளவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த நிலைமை மேலும் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், முடிந்தவரை விரைவில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஈரான் கப்பல் விவகாரத்தில் இலங்கை வழங்கிய உதவி குறித்து கேட்கப்பட்ட போது, உயிர்களைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது ஒத்துழைப்பு எப்போதும் உண்டு என்றார்.
சர்வதேச அரசியலில் இலங்கை ஒரு தரப்பை மட்டும் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவ்வாறு ஒரு பக்கம் சார்ந்து நின்றால் நாட்டிற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
மேலும், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஒரு தலைவர் என்ற ரீதியில், உலகத் தலைவர்கள் அனைவரும் போரை நிறுத்தப் பாடுபட வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் அரசியல் குழு மற்றும் செயற்குழு மாதந்தோறும் கூடி கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும். தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
கிராம மட்டத்திலிருந்து கட்சியை மீண்டும் பலப்படுத்தும் நோக்கில் புதிய செயற்குழுக்களை அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. நாட்டை ஒரு விளையாட்டு மைதானமாகப் பார்க்காமல், ஒரு தாய்நாடாக கருதி செயல்படுபவர்கள் தாங்கள் மட்டுமே என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.





