கெஹெல்பத்தர பத்மேவுக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
சந்தேகநபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு, தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலககுழுவின் முக்கிய புள்ளி என அறியப்படும் கோரளகமகே மந்தினு பத்மசிறி பெரேரா எனும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்படி வழக்கு 03-09-2026அன்று கொழும்பு நீதிவான் அஸங்க எஸ். போதரம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைகளுக்காக, பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்தவாறு சந்தேகநபர் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், சந்தேகநபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது, சந்தேகநபருக்கு எதிராக ஏனைய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்குமாறும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் உள்ள வழக்கு மற்றும் கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கை மாத்திரம் இந்த நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறும் நீதிவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.
மேலும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் முன்வைத்த சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான் சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.





