சாணக்கியன் எம்.பி. நெதர்லாந்து தூதுவர் சந்திப்பு
'தமிழ் மக்கள் ஒருபுறம் அரசியல் தீர்வை வலியுறுத்தி வருவதுடன், மறுபுறம் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்துமாறு கோரிவருகின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வீபே டி பொயெரிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எடுத்துரைத்தார்.
நெதர்லாந்து தூதுவருடன் 03-09-2026அன்று நடைபெற்ற சந்திப்பின்போது மேற்குறிப்பிட்ட விடயம் பற்றி எடுத்துரைத்த சாணக்கியன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் அரசியல், காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கிலான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மாத்திரமன்றி, தற்போதைய அரசாங்கத்தின் கீழும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக நெதர்லாந்து தூதுவரிடம் சுட்டிக்காட்டிய சாணக்கியன், குறிப்பாக மயிலத்தமடு-மாதவனை போன்ற பாரம்பரிய மேய்ச்சல் தரைப் பகுதிகளை தமிழ் மக்களிடமிருந்து அபகரித்து, அங்கு குடியேற்றங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது இதற்கான முக்கிய உதாரணமாகும் எனத் தெரிவித்தார்.
'தமிழ் மக்கள் ஒருபுறம் அரசியல் தீர்வை வலியுறுத்தி வருவதுடன், மறுபுறம் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்துமாறு கோரிவருகின்றனர். ஆனால் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் பெரும்பான்மையினக் குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் தொடருமேயானால், எதிர்வருங்காலங்களில் மாகாணசபைகள் உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்டமைப்பிலும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது' என்றும் சாணக்கியன் கரிசனை வெளியிட்டார்.
அதேபோன்று தமிழர்களின் மக்கள் தொகை விகிதாசாரம் குறைக்கப்பட்டால், புதிய அரசியலமைப்பு அல்லது புதிய அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும், அதனால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லாத நிலை உருவாகும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
'தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமல் வேறு சில விடயங்கள் மாத்திரமே அரசாங்கத்தின் சாதனைகளாக முன்னிறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. எமது மக்கள் அவர்களது அடிப்படை அரசியல் மற்றும் வாழ்வாதார உரிமைகள் தொடர்பில் தெளிவான புரிதலுடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யவேண்டும்' என்றும் நெதர்லாந்து தூதுவரிடம் சாணக்கியன் வலியுறுத்தினார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளிலும் நீண்டகாலமாக நீடித்துவரும் காணி உரிமை சார்ந்த பிரச்சினைகள், இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள், மகாவலி விரிவாக்கத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள், வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களங்களின் எல்லை நிர்ணயங்கள், தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் தோற்றம் பெற்றுள்ள காணி உரிமை சிக்கல்கள் என்பன உள்ளடங்கலாக மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது சாணக்கியன் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.





