சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி
ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதியே நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவதற்கு எதிராக, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி மனு 03-09-2026அன்று மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரொஹான் அபேசூரிய தலைமையிலான, நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகிய இருவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேற்படி மனுவில் 6 ஆவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள அருட்தந்தை ரொஹந்த சில்வா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் டி சில்வா பெரேரா விடயங்களை முன்வைக்கையில், "கனம் நீதிபதி அவர்களே, மனுதாரர், பிரதிவாதியான எனது சேவைபெறுநருடன் ஜெயகி டி அல்விஸ் ஆணைக்குழுவில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். எனினும் ஜெயகி டி அல்விஸ் ஆணைக்குழு அந்த அறிக்கை தொடர்பில் வெளிப்படுத்தவில்லை. முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அதனை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதியே நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் விதிமுறைகளை மீறி அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் சட்டத்தன்மை தொடர்பில் சிக்கல் உள்ளது. மனுதாரர் ரிட் மனுவைத் தாக்கல் செய்யும்போது பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படை உண்மைகளைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார். ஆகையால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்யுமாறு மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.





