பயங்கரவாத தடை சட்ட திருத்தம் குறித்து ஐ.நா வதிவிடப்பிரதிநிதி நீதியமைச்சருடன் கலந்துரையாடல்
சட்ட ஆட்சி சார்ந்த மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆன்ரே பிரான்ஞ்சே நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆன்ரே பிரான்ஞ்சேவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது பயங்கரவாதத்தடைச்சட்டத் திருத்தம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிகள் என்பன உள்ளடங்கலாக சட்ட ஆட்சி சார்ந்த மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்டோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.





