ஈராண்டு ஆட்சியில் நாட்டு மக்களுக்கு எந்த மாட்சியும் இல்லை; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டங்களை நடத்தக் கூட ஜனாதிபதிக்கு முடியாமல் போயுள்ளது.
20 ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பை கோரிய ஜனாதிபதிக்கு ஏன் 22 ஆவது திருத்தத்துக்கு அது தேவைப்படாமல் போனது என ஜனாதிபதி கேட்கிறேன். அதேநேரம் அரசாங்கத்தின் ஈராண்டு ஆட்சியில் நாட்டு மக்களுக்கு எந்த மாட்சியும் இல்லை. மாறாக அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கே மாட்சியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மகளிர் சக்தியின் இரத்தோட்டை தொகுதி ஸ்தாபக கூட்டம் 06-09-2026 அன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்படுகையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு, நீதியின் ஆட்சி சீரழிந்து செல்கின்றது. ஏலவே நாளாந்தம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதால் நீதியின் ஆட்சி குறைந்திருக்கும் நாட்டில், 22 ஆவது திருத்தத்தின் மூலம் அது முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்..
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த சமயத்தில், அப்போதைய அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென தெரிவி்து வந்தார். ஆனால் இன்று சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்று அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே கூறி வருகின்றனர்.
அன்று 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தபோது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியதைப் போல, 22 ஆவது திருத்தத்திற்கும் அத்தகைய சர்வஜன வாக்கெடுப்பு அவசியமல்லவா என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புகிறேன்.
இந்த அரசாங்கம் மனிதநேயமற்ற, மனித உரிமைகளை மீறும், மக்களின் இறையாண்மைக்கு இடமளிக்காத, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மதிக்காத ஒரு அரசாங்கமாக காணப்படுகின்றது. இந்த சர்வாதிகார போக்கு இளைஞர் கழக தேர்தல் மற்றும் சிவில் பாதுகாப்புப்புக் குழுத் தேர்தல்களில் இருந்துதான் தொடங்கியது.
பெலவத்தையின் பட்டியலின்படி உறுப்பினர்களை நியமித்த இந்த அரசாங்கம் ஜனநாயகத்தைச் சீரழித்துவிட்டது. மக்களின் உரிமைகளைப் பறித்து, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியை கொண்டு வர முற்படுகின்றது.
ஜனாதிபதி இந்நாட்களில் நாடெங்கும் பேரணிகளை நடத்துகிறார். மேலும் பல பொய்களை அள்ளிக் கொட்டவே பேரணிகளை ஆரம்பித்திருக்கிறார். பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டு இறுதியில் மேலும் பொய்களைக் கூறுவதற்கு ஆரம்பித்துள்ளார். மக்களின் உண்மையான நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வேண்டுமானால் பொய் பேரணிகளை நடத்துவதை விட்டுவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றேன்.
அதேநேரம் ஜனாதிபதியின் நேற்றைய பேருவளைக் கூட்டத்தின் காரணமாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் பேருவளைத் துறைமுகத்திற்கு உள்ளே வர முடியாதவாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டங்களை நடத்தக் கூட ஜனாதிபதிக்கு முடியாமல் போயுள்ளது.
அதேநேரம் இன்று நாட்டை ஆட்சி செய்யும் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கத்தின் பிரதான அடிப்படைக் கொள்கை கொடுங்கோன்மை, அடக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் உரிமைகளை நீக்குவது என்பனவாகும். மக்களின் துயரைத் துடைப்பதற்குப் பதிலாக மக்களின் துயரை மேலும் அதிகரித்து வருகின்றனர். இதனால் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு மறந்துபோய்விட்டன. இவர்கள் நாட்டுக்கு ஆக்கபூர்வமான எதையாவது செய்வதற்குப் பதிலாக இரண்டு ஆண்டுகளைக் கொண்டாடுவதற்காக பேரணித் தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அரசாங்கத்தின் கூட்டத் தொடரின் பிரதான தொனிப்பொருள் 'நமது அரசாங்கம்' 'ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி' மாபெரும் பேரணிகள் என்பதாக காணப்பட்ட போதிலும், இன்றும் 'டித்வா' சூறாவளியால் இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்படும் என கூறப்பட்ட நிவாரணங்கள் இன்னும் கிடைத்தபாடில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருள் தருவோம், மின்சாரக் கட்டணத்தை 32 வீதத்தால் குறைப்போம் போன்ற எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை ஏற்றியுள்ளனர்.
இன்று பாரிய மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதுடன் அவசர சத்திர சிகிச்சைகளைச் செய்வதற்குகூட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளமை நாட்டுக்கு மாட்சியா என கேட்கிறேன். இந்த இரண்டு ஆண்டுகள் மாட்சியாக மாறியிருப்பது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்குமே தவிர நாட்டுக்கு அல்ல என்றார்.





