சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள்; கவீந்திரன் கோடீஸ்வரன்
அவர் பிழையை உணர்ந்து முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்த போதும், இங்கிருந்த சிலர் சவூதி அரசாங்கத்திற்கு விடுத்த கோரிக்கைக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் நபிகள் நாயகத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 21-07-2026 அன்று நடைபெற்ற பொதுமனுக்கள் பற்றிய குழுவின் நடவடிக்கைமுறை மற்றும் செயலாற்றுகை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சிவராசா அனோஜன் என்பவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டமைக்கு என்ன காரணம் என்றால் யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் போது சுப்ரமணியம் என்ற நாயை நபரொருவர் தாக்கினார். இந்த சம்பவம் இரண்டு சமூகங்களுக்கு இடையில் முகநூல் வாயிலாக பிரச்சினைகளை ஏற்படுத்தியது.
முகநூலில் ஒரு மதத்தை இன்னுமொரு மதத்தவர் விமர்சித்தும் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவு காரணமாக முரண்பாடான சூழல் காணப்பட்டது. இந்நிலையில் சவூதியில் பணிபுரிந்த தமிழ் இளைஞனான சிவராஜா அனோஜன் உணர்ச்சி வசப்பட்டு, முஸ்லிம்களாலும் ஏனைய மதத்தவர்களாலும் மதிக்கப்படும் நபிகள் நாயகத்தை விமர்சித்து பதிவிட்டிருந்தார். ஆனால் குறிப்பிட்ட 5 நிமிடங்களுக்குள் அந்தப் பதிவை நீக்கி, தனது தவறு தொடர்பில் மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனால் அவர் பிழையை உணர்ந்து முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்த போதும், இங்கிருந்த சிலர் சவூதி அரசாங்கத்திற்கு விடுத்த கோரிக்கைக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வேண்டுமென்று அந்த தவறை செய்யவில்லை. உணர்ச்சி வசப்பட்டு அந்த தவறை செய்துள்ளார். அவருக்கான மன்னிப்பை வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும். இந்த சபையின் ஊடாக இந்த அரசாங்கத்தின் ஊடாக சவூதி அரசாங்கத்திற்கு விடயத்தை கொண்டு சென்று அவரை விடுதலை செய்வதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று கோருகின்றோம். சவூதி தூதரகத்திற்கும் இது தொடர்பான விண்ணப்பங்களை வழங்கி அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.





