நாட்டைவிட்டு வெளியேறியுள்ள பிரேமலால் ஜெயசேகர
மூவருக்கும் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்திருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மூவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவுக்கு (சொக்கா மல்லி) உயர் நீதிமன்றம் வெளிநாடு செல்ல பயணத்தடை விதித்திருந்த நிலையில், அவர் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட 3 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (5) உத்தரவிட்டிருந்ததோடு, அவர்களுக்கு வெளிநாடு செல்லவும் பயணத்தடை விதித்திருந்தது. கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற மனிதப்படுகொலை வழக்கில் மேற்படி மூவருக்கும் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்திருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மூவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்ட மூவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரான சாந்த தொடங்கொட என்பவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு அமைவாக பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வெளிநாட்டுப் பயணத்தடையை செயற்படுத்த முயன்றபோதே, முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த மாதம் 31 ஆம் திகதியன்று தாய்லாந்து நோக்கி பயணமாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது கஹவத்தை பகுதியில் வைத்து நபர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மேற்படி சம்பவத்தில் பிரேமலால் ஜயசேகர, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நிலந்த ஜயசிங்க மற்றும் முன்னாள் கஹவத்தை பிரதேசசபை தவிசாளர் வஜிர தர்ஷன த சில்வா ஆகியோர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேற்படி உத்தரவை இரத்து செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் சந்தேகநபர்களை வழக்கிலிருந்து விடுவித்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர் அச்சல வெங்கப்புலி, நீதியரசர் கியான் குலத்துங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக்க பண்டார, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிராக பயணத்தடை விதிக்குமாறு மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான லத்துவஹெட்டி, யு.ஆர்.த சில்வா மற்றும் அனுஜ் பிரேமரத்ன ஆகியோர் முன்னிலையாகியிருந்ததோடு, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன்னிலையாகியிருந்தார்.





