உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி
'திட்வா' சூறாவளி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வாராந்தம் புதன்கிழமை அரச விடுமுறை தினமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாடசாலை கலவி நடவடிக்கைகள் முறையாக நடைபெறவில்லை என சுட்டிக்காட்டினார்.
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் தாக்கல் செய்திருந்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டது.
குறித்த மனு 23-07-2026 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற உள்ள 9 மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனு, கடந்த 16 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் (23) வழக்கு விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூபதி கஹதுடுவ மன்றில் விடயங்களை முன்வைக்கையில், கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு அமைய கட்டாயமாக நடத்தப்பட வேண்டிய பாடசாலை நாட்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், 'திட்வா' சூறாவளி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வாராந்தம் புதன்கிழமை அரச விடுமுறை தினமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாடசாலை கலவி நடவடிக்கைகள் முறையாக நடைபெறவில்லை என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து விடயங்களை முன்வைத்த சட்டத்தரணி, இவ்வாறான பின்னணியில், தற்போது திட்டமிட்டுள்ளவாறு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சை நடத்தப்பட்டால் மாணவர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாக கூடும் என்றார்.





