22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தமது மனு பரிசீலிக்கப்படாமைக்கு எதிராக புதிய அடிப்படை உரிமை மனு
குறித்த மனு விசாரணைக்காக திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தித் தாம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் துலார குணதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க ஆகியோரினால் உயர்நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, துலார குணதிலக்க என்பவரால் உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த மனு விசாரணைக்காக திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாகத் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர். அத்துடன், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, 22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்ட மூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அறிவிப்பதைத் தடுத்து இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.





