அமெரிக்கா - இலங்கை இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், இதன் மூலம் துறைமுக செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டு கப்பல்கள் தங்கியிருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, அமெரிக்க மத்திய கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லோரா டிபெல்லா ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் அமெரிக்க மத்திய கடல்சார் ஆணைக்குழுவின் ஆணையாளர் ரொபேர்ட் ஹார்வி மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டுத் திறனை அதிகரிப்பது, டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவது மற்றும் எதிர்கால துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்கு சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பாக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை அமைச்சர் விளக்கினார்.
மேலும், நாட்டின் கடல்சார் துறையை பலப்படுத்தும் நோக்கில் வணிகக் கப்பல் செயலகத்தை வலுவான அதிகாரமிக்க அமைப்பாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் நிறுவனத் திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுக்குழுவினர், கொழும்பு துறைமுகத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 1.5 கோடி அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர். அடுத்த சில வாரங்களில் அமெரிக்க காங்கிரஸ் சபையின் அனுமதி கிடைத்தவுடன் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், இதன் மூலம் துறைமுக செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டு கப்பல்கள் தங்கியிருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் இரண்டாவது மேற்கு முனையத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு அலைதாங்கி அமைப்பை விரிவுபடுத்துவது அத்தியாவசியமானது என்பதால், அதற்காக நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகமானது இலங்கைக்கு மட்டுமன்றி அமெரிக்காவுடனான சரக்கு போக்குவரத்திற்கும் மிக முக்கிய மையமாக விளங்குவதால், அதன் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க தூதுக்குழுவினர் உறுதி அளித்தனர்.
இதேவேளை, செப்டம்பர் 09 முதல் 11 வரை நடைபெறவுள்ள 08 ஆவது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் ஏற்பாட்டியல் மாநாட்டில் லோரா டிபெல்லா உரையாற்றவுள்ளதுடன், ஆணையாளர் ரொபேர்ட் ஹார்வி கலந்துரையாடல் குழு உறுப்பினராகப் பங்கேற்கவுள்ளார். 1961 இல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க மத்திய கடல்சார் ஆணைக்குழு (FMC), அமெரிக்காவின் சர்வதேச கடல்சார் போக்குவரத்து அமைப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு சுயாதீன நிறுவனமாகும்.





