ஆதாரங்களை திரட்டும் பொறிமுறையை நிராகரிக்கிறோம் - இலங்கை வலியுறுத்து
ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப் பொறிமுறையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட எந்தவொரு வெளியகப் பொறிமுறையையும் நிராகரிப்பதாகவும், அவ்வாறான பொறிமுறைகள் பிளவுகளை ஏற்படுத்தி, தேசிய செயன்முறைகளைப் பலவீனப்படுத்தும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் திசாநாயக்க, நல்லிணக்கத்தையும் சுபீட்சத்தையும் அடைவதற்கான தேசிய பொறிமுறைக்கு பேரவை ஆதரவளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடரில் 08-09-2026அன்று அமர்வின்போது 'இல்ஙகையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் வாசிக்கப்பட்டது.
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்குப் பதிலளித்து இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் திசாநாயக்க, 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய எழுத்துமூல அறிக்கை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்புடன் இணைந்து செயலாற்றிவரும் அதேவேளை, தேசிய ரீதியிலான உள்ளகப்பொறிமுறையையே வலியுறுத்தி வருகின்றது' எனச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடமேறி இம்மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைவதாகவும், இக்காலப்பகுதியில் தித்வா சூறாவளி மற்றும் உலகளாவிய நெருக்கடி நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவுசெய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 60ஃ1 தீர்மானத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப் பொறிமுறையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். ஏனெனில் அச்செயன்முறை இனங்களைத் துருவமயப்படுத்துவதுடன், நாட்டுக்குள் பிளவுகளைத் தோற்றுவிக்கும்' எனவும் இலங்கைப் பிரதிநிதி தெரிவித்தார்.
இருப்பினும் ஏற்கனவே அளித்த வாக்குறுதிக்கு அமைவாக முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அடுத்த மாதம் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அதேபோன்று நிகழ்நிலைக்காப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் முழுமையாக பூரணப்படுத்தப்பட்டுள்ளன. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் என்பன அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக இயங்கிவருகின்றன' எனத் தெளிவுபடுத்தினார்.
மேலும் உள்நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முறையான ஆவணங்களின்றி அல்லது முறையற்ற வழிமுறைகளின் ஊடாக இந்தியாவுக்கு சென்றவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், முதற்தடவையாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை இலக்காகக்கொண்டு அரசாங்கம் முற்போக்காக செயற்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார்.
அத்தோடு ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளடங்கலாக எந்தவொரு வெளியகப் பொறிமுறையையும் நிராகரித்த அவர், அவ்வாறான பொறிமுறைகள் பிளவுகளை ஏற்படுத்தி, தேசிய செயன்முறைகளைப் பலவீனப்படுத்தும் என்று சுட்டிக்காட்டியதுடன், நல்லிணக்கத்தையும் சுபீட்சத்தையும் அடைந்துகொள்வதற்கான தேசிய பொறிமுறைக்கு பேரவை ஆதரவளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.





