சரண குணவர்தனவின் ஊழல் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை பெற்று தருவதாகக் கூறி இலஞ்சம்
வாட்ஸ்அப் ஊடாகப் பரிமாற்றப்பட்ட குறுஞ்செய்திகள் மற்றும் பணச் செலுத்தப்பட்டமையை உறுதிப்படுத்தும் ரசீதுகள் என்பனவும் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஊழல் வழக்கில், அவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை பெற்றுத் தருவதாகக் கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் 08-09-2026 அன்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் அபிவிருத்தி லொத்தர் சபைத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தனவுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள "மெதிவெல வீடமைப்பு" மோசடி வழக்கை மையப்படுத்தியே மேற்படி இலஞ்சக் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாட்ஸ்அப் ஊடாகப் பரிமாற்றப்பட்ட குறுஞ்செய்திகள் மற்றும் பணச் செலுத்தப்பட்டமையை உறுதிப்படுத்தும் ரசீதுகள் என்பனவும் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சரண குணவர்தன 2006–2007 காலப்பகுதியில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மெதிவெல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை அபிவிருத்தி லொத்தர் சபையின் பயன்பாட்டுக்காக வாடகைக்கு எடுக்கும்போது, அவ்வீட்டின் உரிமையாளருக்கு 19 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா குத்தகை முன்பணத்தை செலுத்துவதுக்காக சபையின் அதிகாரிகளைத் தூண்டியதன் மூலம் சரண குணவர்தன ஊழல் எனும் குற்றத்தைப் புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.





