திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதுடன், பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான புதிய திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுத்தல் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடவும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள இச்சட்டமூலமானது எல்லை கடந்த (உள்நாட்டு மட்டத்தைக் கடந்த) திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தை தேசிய அளவில் வலுவாக்குதலை அடிப்படையாகக் கொண்டது.
மேலும் பயனுள்ள தேசிய மற்றும் சர்வதேச கட்டமைப்பு ரீதியான ஒத்துழைப்புகள் மூலம் மோசமான குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அவற்றுக்கெதிராகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கான புதிய சட்ட ஏற்பாடுகளை வகுத்தல் என்பவற்றையும் பிரதானமாகக் கொண்டது.





