இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை 09-09-2026 அன்று பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இலங்கை கடினமான காலகட்டங்களை எதிர்கொண்ட தருணங்களில் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவு பாராட்டத்தக்கது.'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இந்தியா வழங்கிய உதவி என்றும் வரவேற்கத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையில் நிறுவன ரீதியான ஆற்றல்களைப் பலப்படுத்துவது நல்லாட்சியை முன்னெடுப்பதற்கு பங்களிப்புச் செய்கிறது என பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்திடம் தெரிவித்தார்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை 09-09-2026 அன்று பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, நாடு கடினமான காலகட்டங்களை எதிர்கொண்ட தருணங்களில் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்குப் பிரதமர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அதிலும் குறிப்பாக 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இந்தியா வழங்கிய உதவிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இலங்கைக்கு மனிதநேய மற்றும் அனர்த்த நிவாரண உதவிகளை வழங்குவதன் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்தினால் 'சாகர் பந்து நடவடிக்கை' ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்றார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவானது இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளுக்கும் அப்பால் விரிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் ஒருங்கிணைந்த பகுதியாக கலாச்சார, வரலாற்று மற்றும் சமயத் தொடர்புகள் விளங்குகின்றன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தகம், அபிவிருத்தி,பாதுகாப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட பரந்தளவிலான துறைகளில் இலங்கைக்கு இந்தியா ஒரு முக்கியமான பங்காளியாக இருந்து வருவது குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு பாராளுமன்ற மற்றும் அரசாங்கத் துறைகள் உள்ளிட்ட திறன் அபிவிருத்தித் துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பைப் பேணி வருவதுடன், இது நிறுவன ரீதியான ஆற்றல்களைப் பலப்படுத்துவதற்கும் நல்லாட்சியை முன்னெடுப்பதற்கும் பங்களிப்புச் செய்கிறது.
பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் நீண்டகால ஒத்துழைப்பைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பங்காண்மையைத் தொடர்ந்து பேணி, மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இவ்விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பிராந்திய ஒத்துழைப்பை,குறிப்பாக சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அறிவுப் பரிமாற்றம், புத்தாக்கம் மற்றும் திறன் அபிவிருத்தி ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்காக, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற விசேட கல்வி நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் உட்பட, இலங்கை மற்றும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.





