இறக்குமதி செய்யப்பட்ட 1025 வாகனங்கள் தேக்கம் - இலங்கை சுங்கம் அறிவிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகத் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை எனில், அது குறித்து துறைமுகக் கட்டுப்பாட்டாளர் இலங்கைச் சுங்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில்,
இறக்குமதி செய்யப்பட்ட 1,025 வாகனங்கள் விடுவிக்கப்படாதுள்ள நிலையில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகின்றன
குறித்த வாகனங்களில் எந்தவிதமான சுங்கக் குற்றங்களும் இல்லை அதன்படி, எவ்வித சுங்கக் குற்றங்களும் இன்றி விடுவிக்கப்படாத வாகனங்களைச் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவுக்கு அமைவாக ஏலம் விடுவதற்கோ அல்லது கேள்விப்பத்திரங்களைக் கோரி விற்பனை செய்வதற்கோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாதத்திற்குள் அதற்குரிய அனைத்து வரிகளையும் செலுத்தி விடுவித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த சட்டத்தின் கீழ் அவற்றை விற்பனை செய்து, அந்தப் பணத்தின் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான வரித் தொகையை அறவிட்டுக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் உள்ளன.
உரிய வரிகளைச்செலுத்திய பின்னர் எஞ்சியிருக்கும் தொகையைக் கொண்டு துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்த முடியும். அக்கட்டணங்களைச் செலுத்திய பின்னரும் எஞ்சியத் தொகை ஏதேனும் இருப்பின், அதனைத் தொடர்புடைய இறக்குமதியாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகத் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை எனில், அது குறித்து துறைமுகக் கட்டுப்பாட்டாளர் இலங்கைச் சுங்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.
தற்போது வரை விடுவிக்கப்படாத வாகனங்கள் குறித்துத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய எதிர்காலத்தில் அவற்றை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இருப்பினும், நியாயமான காரணத்தினால் குறித்த வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக ஏதேனும் இறக்குமதியாளர் அறிவிக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன என்றார்.





