ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளும் மாணவர்களும் 'நேர்மைக்கான சத்தியப் பிரமாணம்' எடுக்க நடவடிக்கை
தற்போதைய தவணைப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர், ஓகஸ்ட் 3 ஆம் திகதி பாடசாலை மாணவர்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்வர்.
அரசாங்கத்தின் 'கிளீன் சிறிலங்கா தேசிய திட்டத்தின்' கீழ், அனைத்து அரச ஊழியர்களும் பாடசாலை மாணவர்களும் தத்தமது நிறுவனங்களில் 'நேர்மைக்கான சத்தியப் பிரமாணத்தை' எடுத்துக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஊழலற்ற மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அனுசரிக்கப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான 'தேசிய நேர்மை வார' ஆரம்பத்தை முன்னிட்டு, அனைத்து அரச துறை ஊழியர்களும் இன்றையதினம் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய தவணைப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர், ஓகஸ்ட் 3 ஆம் திகதி பாடசாலை மாணவர்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்வர்.
ஜனாதிபதிச் செயலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவினால் மாகாண சபைகள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் குறித்த செயற்பாட்டை முன்னெடுக்குமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தனிப்பட்ட இலாபங்களை விடப் பொது நலனுக்கு முன்னுரிமை அளித்து, சுய ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளுடன் சேவையாற்றும் அரச அதிகாரிகளை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும் என்று ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.





