யோஷிதவுக்கு எதிரான வழக்கு - பொய் சாட்சியமளித்த நபருக்கு பிணை
காணி உள்ளிட்ட சொத்து விற்பனையில் ஈடுபடும் தரகரான பாலித கமகே என்பவரே இவ்வாறு எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பண சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொய் சாட்சியமளித்த நபரை 20 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் 10-09-2026 அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நீதிபதி அவருக்கு பிணைவழங்கி உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன், நீதிமன்றத்தில் பொய் சாட்சியமளித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அனைத்து நாட்களிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறித்த சாட்சியக்காரருக்கு நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.
காணி உள்ளிட்ட சொத்து விற்பனையில் ஈடுபடும் தரகரான பாலித கமகே என்பவரே இவ்வாறு எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த சாட்சியாளர் புலனாய்வு அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலங்களுக்கு முரணான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவரை முறைப்பாட்டுக்கு பாதகமான சாட்சியக்காரராக அறிவித்து குறுக்கு விசாரணை செய்வதற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார அனுமதி கோரியதுடன், அதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.
அதனைத் தொடர்ந்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சாட்சியாளர், தான் காணி உள்ளிட்ட சொத்துகளை விற்பனை செய்யும் தரகர் எனவும், இவ்வழக்கு தொடர்பில் இரண்டு வாக்குமூலங்களை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்த போது, அங்கு பணியாற்றிய தரிந்து என்பவருக்கு அரச கொள்முதல் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதற்காக 142 இலட்சம் ரூபா வழங்கியதாக முதலில் கூறியபோதிலும், பின்னர் அளித்த மூன்றாவது வாக்குமூலத்தில் அந்த முன்னைய கூற்று பொய் எனக் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.





