கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் இரு கொள்கலன்கள் - பொலிஸ் விரிவான விசாரணை
பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இந்த உள்வீட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் சிஐசி ரி முனையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரு கொள்கலன்கள் தொடர்பான விசாரணைகளில் இடம்பெற்ற குறைபாடுகள் குறித்து பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இரு கொள்கலன்களில் பெருமளவிலான போதைப்பொருள் மறைத்து வைத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில் சில குறைபாடுகளும் கவனயீனங்களும் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைவாக, அது தொடர்பில் கண்டறிவதற்காக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இந்த உள்வீட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போதைப்பொருளுடன் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் பிரதான விசாரணைகளுக்கு இந்த விசாரணையால் எவ்வித தடையும் ஏற்படாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.





