அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக சலுகை வழங்கல் திட்ட மறுசீரமைப்பு
ஆடையுற்பத்தித்துறையில் இலங்கையின் நிலை மேலும் வலுவடையும் என்பதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அது பெரிதும் உதவும்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் கைத்தொழில், முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ஆகியோர் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆடையுற்பத்தி மற்றும் தர உத்தரவாத வசதிகளைச் சென்று பார்வையிட்டனர்.
பிரித்தானியாவின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக சலுகை வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கள் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமலுக்கு வந்திருக்கும் நிலையிலேயே மேற்குறிப்பிட்ட விஜயம் இடம்பெற்றுள்ளது. இம்மறுசீரமைப்புக்கள் மூலம் இலங்கையின் ஆடை உற்பத்தியாளர்கள் உலகநாடுகளிடமிருந்து தமக்கு ஆடையுற்பத்தி நடவடிக்கைகளுக்கு அவசியமான துணிகளைக் கொள்வனவு செய்யமுடியும் என்பதுடன், பிரித்தானிய சந்தைக்குள் தீர்வையின்றிப் பிரவேசிக்கமுடியும். இதனூடாக ஆடையுற்பத்தித்துறையில் இலங்கையின் நிலை மேலும் வலுவடையும் என்பதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அது பெரிதும் உதவும்.
அதன்படி இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மூலப்பொருள் கொள்வனவு நிறுவனமான 'நெக்ஸ்ட் சோர்ஸிங் ஸ்ரீலங்கா' நிறுவனப் பணிப்பாளர் வில்ஹெம் இலியாஸ், 'உலக நாடுகளிடமிருந்து இலங்கையின் ஆடையுற்பத்தி துறைக்கு அவசியமான துணிகளை இறக்குமதி செய்து, தீர்வையின்றி பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பு அளித்திருக்கும் பிரித்தானியாவின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்த சலுகை வழங்கல் திட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து எமது நிறுவனத்தின் மூலப்பொருள் இறக்குமதி மற்றும் வடிவமைப்புக்குழுவானது கடந்த 6 மாதங்களில் பல நாடுகளுக்கு விஜயம் செய்து, முக்கிய துணி கண்காட்சிகளில் கலந்துகொண்டு, இத்துறைக்கான அடித்தளத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது' என சுட்டிக்காட்டியுள்ளார்.





