சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் ஊடாகவே தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு: பேர்ள் அமைப்பு
'தற்போதைய அரசாங்கம் பொருளாதாரக்குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பினும், நாட்டில் இடம்பெற்ற மனிதாபிமானத்துக்கு எதிரான மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் அர்த்தமுள்ள முன்னேற்றம் எதனையும் எட்டவில்லை.
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவரமுடியும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு (பேர்ள்) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் 09-09-2025 அன்று ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது.
அவ்விவாதத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கருத்துரைத்த பேர்ள் அமைப்பின் பிரதிநிதி, 'இலங்கையில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்த பின்னரும் நாட்டில் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை செம்மணி மனிதப்புதைகுழி நினைவூட்டுகிறது' எனச் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு 169,796 க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை எனவும், அவர்கள் மரணித்திருக்கக்கூடும் என நம்பப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவரமுடியும் என நினைவூட்டினார்.
'தற்போதைய அரசாங்கம் பொருளாதாரக்குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பினும், நாட்டில் இடம்பெற்ற மனிதாபிமானத்துக்கு எதிரான மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் அர்த்தமுள்ள முன்னேற்றம் எதனையும் எட்டவில்லை.
குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை என்பதுடன் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் தொடர்ச்சியாக கண்காணிப்புக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்துவருகின்றனர்.
அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் மற்றும் சிங்களமயமாக்கம் என்பன தொடர்கின்றன. முன்னைய அரசாங்கங்களைப்போல தற்போதைய அரசாங்கமும் நல்லிணக்கம் எனும் சொல்லை வெறுமனே பயன்படுத்துகின்றதே தவிர, அதனை உண்மையில் அடைந்துகொள்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை' எனவும் பேர்ள் அமைப்பின் பிரதிநிதி கரிசனை வெளிப்படுத்தினார்.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச சமூகம் உலகளாவிய நியாயாதிக்கத்தைப் பிரயோகிக்கவேண்டும் எனவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றின் ஊடாக சட்ட ரீதியான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்குரிய நகர்வுகளை மேற்கொள்ளவேணடும் எனவும் வலியுறுத்திய அவர், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட தமிழ்மக்களின் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் உறுதிசெய்யப்படாதவிடத்து, நாட்டில் நெருக்கடியை முடிவுக்குக்கொண்டுவரமுடியாது எனத் தெரிவித்தார்.





