செஸ் வரியை நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி; பிரதி அமைச்சர் அனில் ஜயந்த
குறித்த 4 பிரிவுகளின் கீழ் 0 சதவீதம், 10 - 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்ற அடிப்படையில் புதிய சுங்கவரி அறிமுகப்படுத்தப்படும்.
தேசிய தொழில் முயற்சியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-09-2026 அன்று நடைபெற்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், தேசிய தொழில் முயற்சியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதிப் பொருட்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்ட போதிலும்,பல உள்நாட்டுத் தொழில்கள் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களையே தங்கியுள்ளதாகவும், அந்த உற்பத்திகளின் செலவும் அதற்கேற்ப உயர் மட்டத்தில் காணப்படுவதால், கட்டம் கட்டமாக செஸ் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கமைய, முதற்கட்டமாக இடைநிலைப் பொருட்களுக்குச் சலுகைக் காலத்துடன் செஸ் வரி படிப்படியாக நீக்கப்படுவதன் மூலம்,உள்நாட்டுத் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மற்றும் முறையான உற்பத்திச் செயல்பாட்டிற்கு உற்பத்தியாளர்களைப் பழக்கப்படுத்துவதற்கான திறனையும், அவர்களுக்கு அவசியமான மூலப்பொருள் செலவைக் குறைப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கும் அணுகுமுறையையும் அரசாங்கம் இதன் மூலம் எதிர்பார்க்கிறது.
இதற்கமைய செஸ் வரியை நீக்குவதுடன் புதிய சுங்கவரி கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய 4 பிரிவுகளின் கீழ் அந்தச் சுங்கவரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறித்த 4 பிரிவுகளின் கீழ் 0 சதவீதம், 10 - 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்ற அடிப்படையில் புதிய சுங்கவரி அறிமுகப்படுத்தப்படும்.
மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திகளுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு 0 சதவீதம் , முடிவுற்ற பொருட்களாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பொருட்களுக்கு அதிகபட்சமாக 30 சதவீதம் வரை புதிய சுங்கவரி விதிக்கப்படும் என்றார்.





