நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் 36வீதம் குறைவு - அஜித் பிபெரேரா எம்.பி
இளைஞர்கள் கல்விக்காக அல்லது தொழிலுக்காக வெளிநாடு செல்கிறார்கள்.
நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கடந்த வருடங்களில் நூற்றுக்கு 36வீதம் குறைவடைந்துள்ளது. இது எமது தாய் நாட்டின் எதிர்காலம் தொடர்பான பாரிய பிரச்சினையாகும். அதனால் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பிபெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-09-2026 அன்று இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்குவிப்புத் தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் 2015 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரையான 10 வருட காலத்தில் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை ஒருலட்சத்தி 21ஆயிரத்தி 527 பேரால் அல்லது நூற்றுக்கு 36வீதம் குறைவடைந்துள்ளது.இதை எங்களுக்கு உணர்ந்துகொள்ளலாம். கிராமப்புற பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்கள் குறைவடைந்துள்ளது. சில பாடசாலைகளில் வகுப்பறைகள் மூடப்பட்டிருக்கின்றன. அந்தளவுக்கு இது உணரப்படுகிறது. இது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும்.
அதேநேரம் இன, மத பேதமின்றி இந்த குழந்தை பிறப்பு குறைவடைந்திருக்கிறது. அதனால் இது எமது தாய் நாட்டின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினையாகும். எமது நாட்டை சிறப்புற முன்னெடுத்துச்செல்ல வருடாந்தம் 3லட்சத்தி 30ஆயிரம் குழந்தை பிறப்பு இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது. அப்படியிருக்கும்போது கடந்த வருடம் குழந்தை பிறப்பு 2லட்சத்தி 14ஆயிரமாகும். இது கொவிட் தொற்றுக்கு முன்பிருந்தே இருந்துவரும் நிலையாகும். இதற்கு பிரதான காரணமாக இருப்பது. திருமணம் முடிக்கும் தற்கால இளைஞர்கள், தாங்கள் இரண்டு, மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து, அந்த குழுந்தைகளுக்கு சிறந்த கல்வியை, எதிர்காலத்தை பெற்றுக்காெடுக்க போதுமான பொருளாதாரம் கிடைக்குமா என்ற அச்சமாகும். அதனால் அவர்கள் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கிறார்கள்.
அதேநேரம் இளைஞர்கள் கல்விக்காக அல்லது தொழிலுக்காக வெளிநாடு செல்கிறார்கள். இளம் தம்பத்திகளில் கணவன் அல்லது மனைவி பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு செல்வதால், அவர்கள் இளமைக்காலத்தில் பிரிந்து இருப்பதால் குழந்தைகளை பெற்றெடுக்கும் காலம் இல்லாமல் போகிறது. அதனால் அவர்கள் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். அதனால் பொருளாதாரத்தை பலப்படுத்தி, குடுபஸ்தர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான சுழலை அரசாங்கம் ஏற்படுத்துவதன் மூலமே இதற்கு தீர்வு காணமுடியும். மாறாக நிவாரணப்பொதிகளை வழங்கி இதற்கு தீர்வு காணமுடியாது என்றார்.





