நீதித்துறையின் சுயாதீனத்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்தல் என்ற விடயம் ஒரு முக்கிய திருத்தமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை.
நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய விடயமாகும். அவ்வாறிருக்கையில் நீதித்துறை சார்ந்த பதவிகள் தொடர்பான அரசியலமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியலமைப்பு விதிகள் என்பன முறையாகப் பின்பற்றப்படவேண்டும் என நேற்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக நாட்டின் சகல நீதிமன்றங்களின் நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை (27) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விவகாரம் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள பின்னணியில், இதுபற்றி ஆராயும் நோக்கில் விசேட சந்தர்ப்பங்களின்போது மாத்திரம் கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபை நேற்று புதன்கிழமை (29) மு.ப 11.00 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் கூடியது.
நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை முற்றாக எதிர்க்கவேண்டும் என இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அத்தீர்மான வரைவில் உள்ளடங்கியுள்ள ஏனைய முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்துவமானது அரசியலமைப்பின் அடிப்படை தூணாகும். அத்தோடு சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு அடிப்படையிலான ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இது இன்றியமையாததாகும்.
நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய விடயமாகும். அவ்வாறிருக்கையில் நீதித்துறை சார்ந்த பதவிகள் தொடர்பான அரசியலமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியலமைப்பு விதிகள் என்பன முறையாகப் பின்பற்றப்படவேண்டும்.
தற்போது பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக சகல நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை அந்த நீதிபதிகள் பதவியில் இருக்கும்போதே அரசாங்கம் முன்மொழிந்திருக்கிறது. இவ்வாறானதொரு திருத்தத்துக்கான தேவைப்பாடோ அல்லது கட்டமைப்பு ரீதியான நியாயப்படுத்தல்களோ மக்களிடத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை.
அதேபோன்று இந்த யோசனை நீதித்துறை, சட்டத்தரணிகள் சமூகம், கல்வியியலாளர்கள், சிவில் சமூகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான கலந்தாலோசனைகள் இன்றியும், சுயாதீன மற்றும் அரசியலமைப்பு ரீதியிலான பரிசீலனைகள் இன்றியும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சினால் சகல பங்குதாரர்களுடனும் நடத்தப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் நீதித்துறை பற்றிய மதிப்பீடு மற்றும் மூலோபாய நடவடிக்கைத் திட்டம்: வணிக, ஒப்பந்த மற்றும் முதலீட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தல்' எனும் திட்டத்தின் ஊடாக நீதித்துறையை வலுப்படுத்துவதற்கு அவசியமான பல்வேறு கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் அடையாளங்காணப்பட்டிருந்த போதிலும், அதில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்தல் என்ற விடயம் ஒரு முக்கிய திருத்தமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை.
நீதித்துறை முகங்கொடுத்திருக்கும் முக்கிய பிரச்சினைகளான நீதிபதி வெற்றிடங்கள், வழக்கு விசாரணையில் தாமதம், போதிய வளங்கள் இன்மை, தொழில்நுட்ப நவீனமயமாக்கல் இன்மை, பரந்துபட்ட கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் என்பவற்றுக்கே விசேட கவனம் செலுத்தப்படவேண்டும். அத்தோடு தற்போது சேவையில் இருக்கும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றியமைப்பதற்கு பதிலாக, தற்போது நிலவும் நீதிபதி வெற்றிடங்கள் அரசியலமைப்புக்கு அமைவாக விரைவாக நிரப்பப்படவேண்டும்.
மேலும் கடந்தகால அரசியலமைப்பு அனுபவங்களைப் பொறுத்தமட்டில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை திருத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், அவை பரந்துபட்ட கலந்தாய்வு செயன்முறையின் பின்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்மூலம் தற்போது பதவியிலிருக்கும் குறிப்பிட்ட சில நீதிபதிகளை இலக்குவைத்தே இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற எண்ணம் உருவாகாது.
நீதி நிலைநாட்டப்படல் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கையானது நீதித்துறையின் உண்மையான சுயாதீனத்துவத்தில் மாத்திரமன்றி, அந்த சுயாதீனத்துவம் வெளிப்படையாகப் புலப்படுவதிலும் தங்கியுள்ளது.





