நீதித்துறை சுதந்திரத்தை சீர்குலைக்கும் அரசின் நகர்வுகள் சந்தேகத்துக்குரியது -தினன தகுன கூட்டிணைவு
தற்போதைய பிரதம நீதியரசரின் ஓய்வுபெறும் வயதை நீடித்து அவரை அதே பதவியில் தக்கவைப்பதற்குமான ஒரு தந்திரோபாய நடவடிக்கையே இதுவாகும்.
நீதித்துறைச் சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் அரசின் நகர்வுகள் சந்தேகத்துக்குரியது. நீதிமன்றச் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு, அரசியலமைப்பு மற்றும் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதிமன்றங்கள் கட்டமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அண்மையில் அமைச்சரவை வழங்கிய அனுமதி குறித்து தமது கடுமையான எதிர்ப்பையும் சந்தேகத்தையும் தெரிவிப்பதாக தினன தகுன கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.
தினன தகுன கூட்டிணைவின் தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் மாகாண மட்டத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை அமைப்பது போன்ற சாதாரண நிர்வாக நடவடிக்கையாகவே அரசாங்கத்தால் இந்தத் தீர்மானம் சித்தரிக்கப்படுகிறது. எனினும், நிறைவேற்று அதிகாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தற்போதைய பிரதம நீதியரசரின் ஓய்வுபெறும் வயதை நீடித்து அவரை அதே பதவியில் தக்கவைப்பதற்குமான ஒரு தந்திரோபாய நடவடிக்கையே இதுவாகும்.
உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்னர் மேற்கொண்ட முயற்சிக்கு எழுந்த எதிர்ப்பைத் தவிர்ப்பதற்காகவே, பிரபல மறுசீரமைப்பு யோசனைகளுடன் இதனை இணைத்து அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.
நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பதவியிலுள்ள அதிகாரிகளின் நன்மைகளுக்காக அரசியலமைப்பு நிபந்தனைகளை மாற்றுவது அதிகாரப் பகிர்வு கோட்பாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் நீதித்துறை, நிறைவேற்று அதிகாரத்தில் தங்கியிருக்கும் சூழலையே இது தோற்றுவிக்கும்.
அரசாங்கத்தின் நோக்கம் நல்நோக்கம் கொண்டதாக இருந்தால், ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சட்டத் திருத்தங்கள் எதிர்காலத்தில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மட்டுமே பயன்படும் வகையில் அமைய வேண்டும். மாறாகத் தற்போதைய பிரதம நீதியரசருக்கு உடனடி அமலுக்கு வரும் வகையில் பதவிக்கால நீடிப்பு வழங்கப்பட்டால், இது அரசியல் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியை தவிர வேறில்லை.
எனவே, சட்ட வரைஞரால் தயாரிக்கப்படவுள்ள சட்ட மூலங்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நீதித்துறைச் சுதந்திரம் என்பது நிறைவேற்று அதிகாரத்தின் விருப்பத்துக்;கு ஏற்ப மாற்றப்படக்கூடியதொன்றல்ல, அது அரசாங்க அதிகாரத்துக்கு எதிராக அனைத்துக் குடிமக்களையும் பாதுகாக்கும் இறுதிப் கேடயமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





