பிரதம நீதியரசரை இலக்காகக் கொண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை - அரசாங்கம்
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் சட்டத்தரணிகளுக்கும் அவர்களின் கருத்துக்களைத் தெரிவிக்க உரிமை உண்டு.
அரசியலமைப்புத் திருத்தமோ அல்லது நீதித்துறை அமைப்பு சட்டத் திருத்தமோ எந்தவொரு தனிநபரையோ அல்லது தற்போதைய பிரதம நீதியரசரையோ இலக்காகக் கொண்டு செய்யப்படுபவை அல்ல. நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும், தேங்கிக்கிடக்கும் வழக்குகளை முறைப்படி குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவுமே அரசாங்கம் செயற்படுகிறது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசியலமைப்பு திருத்தம் என்பது மிகவும் பரந்த ஒரு விடயமாகும். அதற்கு நீண்டதொரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். எனவே அதனை உடனடியாக செய்ய முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 28-07-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த அரசியலமைப்புத் திருத்தமோ அல்லது சட்டக் வரைவுத் திருத்தங்களோ எந்தவொரு தனிநபரையோ அல்லது தற்போதைய பிரதம நீதியரசரையோ இலக்காகக் கொண்டு செய்யப்படுபவை அல்ல. கடந்த கால அனுபவங்களை வைத்துச் சிலர் சந்தேகங்களை எழுப்பினாலும், 2024 செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் மக்கள் வழங்கிய ஆணையினடிப்படையில் நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும், தேங்கிக்கிடக்கும் வழக்குகளை முறைப்படி குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவுமே அரசாங்கம் செயற்படுகிறது.
நீதிமன்ற அமைப்பைச் சுயாதீனமாகவும், திறம்படவும், மக்களுக்குச் சுமையற்றதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்காக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய நீதிபதிகளை நியமனம் செய்வது, மற்றும் அனுபவமிக்க நீதிபதிகளைச் சேவையில் நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது என முப்பரிமாண நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 20 இலிருந்து 25 ஆகவும், மாகாண மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆகவும் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 66 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் வயதை 65 ஆகவும், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் வயதை 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் வயதை 62 ஆகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த திருத்தத்திற்கு சர்வசன வாக்கெடுப்பு தேவையற்றது. 1978 அரசியலமைப்பை உருவாக்கிய சட்ட வல்லுநர்கள் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 83 மற்றும் 62 ஆகிய குறிப்பிட்ட பிரிவுகளின் திருத்தங்களுக்கு மட்டுமே பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பும் அவசியம் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவோ அல்லது ஓய்வுபெறும் வயதை உயர்த்தவோ அது தேவையில்லை.
கடந்த 2020 ஒக்டோபர் மாதத்திலும் உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட போது சர்வசன வாக்கெடுப்பு கோரப்படவும் இல்லை, நடத்தப்படவும் இல்லை. அரசியலமைப்பு பற்றிப் புரிதல் உள்ள எவரும் இதற்கு சர்வசன வாக்கெடுப்பினை கேட்க மாட்டார்கள். அத்துடன், மேன்முறையீட்டு வழக்குகளுக்காகத் தூரப் பிரதேச மக்கள் கொழும்புக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட சில மாகாண சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை அனுப்பி வழக்குகளை விசாரணை செய்ய பிரதம நீதியரசுக்கு அதிகாரம் உள்ளது.
குருணாகல், மாத்தறை, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை முடிக்கக் கொழும்புக்கு வெளியே புதிய மேல்நீதிமன்றங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். கடந்த கால அரசாங்கங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், குற்றச் செயல்கள் தொடர்பில் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவர்கள், வழக்கு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுவதை விரும்புவதில்லை. அவர்கள் புதிய மேல் நீதிமன்றங்கள் அமைப்பதையோ, புதிய முத்தரப்பு மேல் நீதிமன்றங்களை உருவாக்குவதையோ அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகளின் சேவையைப் பெறுவதையோ முழுமையாக எதிர்க்கின்றனர்.
சாத்தியமானால் நீதிமன்ற அமைப்பையே மூடிவிட்டு தப்பித்து இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இதுபோன்ற வழக்குகள் உட்பட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் விரைவுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இன்றுவரை இதற்கு எதிராக வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு என்னவெனில், இந்த திருத்தங்கள் அனைத்தும் அரசியல் ரீதியாக தலைவர்களை பழிவாங்குவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்பதாகும்.
லும், அவர்களின் வழக்கு திகதிகள் இந்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டன. எனவே, இதற்கும் அவர்களின் வழக்கு நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
சாதாரண மக்களுக்குள்ள பிரச்சனை வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதுதான். ஆனால், இந்த அரசியல்வாதிகளுக்கு உள்ள பிரச்சனை மக்கள் நலன் சார்ந்த வழக்கு விரைவுபடுத்தல் அல்ல் மாறாக, தங்கள் மீதான குற்றச்சாட்டுகள், சட்டமா அதிபரின் வழக்குகள் மற்றும் தீர்ப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ஏதேனும் ஒரு தந்திரத்தைப் பயன்படுத்துவதே ஆகும். இதற்காக அவர்கள் சிறைச்சாலை சம்பவங்களையோ அல்லது துறைமுக நகர சம்பவங்களையோ பயன்படுத்திக் கொள்கின்றனர். இது தவிர, பொதுமக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் காணி வழக்குகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தக் குழுவிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அன்றைய பொதுமக்கள் கருத்து அறியும் குழுவின் தலைவராக சட்டத்தரணி லால் விஜேநாயக்க இருந்தார். அன்று கொண்டுவரப்பட்ட திருத்தத்துக்கு எழுந்த கடும் எதிர்ப்பினால் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. அரசியலமைப்பு திருத்தம் என்பது மிகவும் பரந்த ஒரு விடயமாகும். மக்களுக்கு கலந்துரையாட போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஏனெனில், வரும் தசாப்தங்களுக்கு நிலையான, மீண்டும் மீண்டும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாத ஒரு அரசியலமைப்பையே உருவாக்க வேண்டும். அது பாராளுமன்றத்திலும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.
ஒரு சாதாரண பிரஜையிடம் கேட்டால், வழக்கு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுவதை அவர் நிச்சயம் விரும்புவார். ஆனால், ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வழக்கு விசாரணையில் இருப்பவர்கள் மட்டுமே இதனை எதிர்க்கிறார்கள். தற்போது சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன, மக்கள் நீதிமன்றங்களில் அலைக்கழிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் சட்டத்தரணிகளுக்கும் அவர்களின் கருத்துக்களைத் தெரிவிக்க உரிமை உண்டு. அதை அரசாங்கம் மதிக்கிறது. மருத்துவ அதிகாரிகளுக்கு மருத்துவமனைகளில் உள்ள வரிசைகளைக் குறைக்க விருப்பம் இருப்பது போல, சட்டத்தரணிகளுக்கும் நீதிமன்றங்களில் உள்ள வழக்கு நிலுவைகளைக் குறைக்க விருப்பம் இருக்கும் என நம்பப்படுகிறது. இதற்கு நடைமுறைச் சாத்தியமான வேறு தீர்வுகள் இருந்தால் அவர்கள் முன்மொழியலாம், தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ளதே நடைமுறைச் சாத்தியமான தீர்வாகும் என்றார்.





