பொருளாதாரத்தில் இளைஞர்களின் பங்களிப்பும் குறைவடையும் - அஜித் பி பெரேரா
எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளது.
நாட்டில் 2015 - 2025 வரையிலான 10 வருடங்களில் 121,527 என்ற அளவில் குழந்தை பிறப்பு குறைவடைந்துள்ளது.இவ்வாறு குழந்தை பிறப்பு வீதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், நாட்டின் பொருளாதாரத்தில் இளைஞர்களின் பங்களிப்பும் குறைவடையும். இதனால் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடிய வகையில் குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்கக்கூடியவாறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 11-09-2026 அன்று நடைபெற்ற அமர்வில் குழந்தை பிறப்பு வீத வீழ்ச்சி தொடர்பான தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாலும் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இளைஞர் சனத்தொகை இவ்வாறு வீழ்ச்சியடையும்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும் என்பதாலும் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்கவிப்புத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக குழந்தை பிறப்பு எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு 336,097ஆகவும், 2016ஆம் ஆண்டு 331,073ஆகவும், 2017ஆம் ஆண்டு 326, 051ஆகவும், 2018 ஆம் ஆண்டு 326, 052ஆகவும் காணப்பட்டதுடன், இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்து 2025 ஆம் ஆண்டு 214, 570ஆக குறைவடைந்துள்ளது. இதன்படி 2015இல் இருந்து 2025 வரையிலான 10 வருடங்களில் 121,527 என்ற அளவில் குழந்தைபிறப்பு குறைவடைந்துள்ளது. அல்லது 36 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
இப்போது கிராம பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. சில பாடசாலைகளில் வகுப்புகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலைமையால் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை வரும் வருடங்களில் குறைவடையும். சகல இனங்களிலும் இவ்வாறு பிறப்பு வீதங்களில் குறைவு ஏற்பட்டுள்ளது.
நாட்டை நன்றாக முன்னெடுத்துச் செல்வதற்கு குழந்தை பிறப்பு வீதம் முக்கியம் . சுகாதார அமைச்சின் தகவல்களின்படி 336,000 வரையிலான குழந்தை பிறப்புகள் வருடாந்தம் நடைபெற்றால் நாட்டின் எதிர்காலம் முன்னேற்றமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இப்போது இது குறைவாக இருக்குமாக இருந்தால் அது பெறும் பிரச்சினை. இதனை கொரோனா தொற்றுடன் தொடர்புபடுத்த முடியாது.
குறிப்பாக நாட்டில் பொருளாதார பிரச்சினை இதில் தாக்கல் செலுத்துகின்றது. எதிர்காலம் தொடர்பான அச்சம் குடும்பங்களிடம் உள்ளது. இதனால் குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான ஆர்வம் குறைவடைகின்றது. இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இதனால் உரிய காலத்தில் குழந்தை பிறப்பதில்லை. இவ்வாறு பொருளாதார ரீதியான பிரச்சினையால் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு தீர்வு காண ஊக்குவிப்பு தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கும் நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





