இலங்கை அகதியாக புலம்பெயர்ந்து நோர்வே அமைச்சரானார் கம்சி குணரத்னம்
கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்துவந்த ஜோன்-இவர் நைகார்ட்டுக்கு பதிலாக கம்சி குணரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக 3 வயதில் அகதியாக நோர்வேயை சென்றடைந்த கம்சாயினி (கம்சி) குணரத்னம், அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதற்கமைய நோர்வேயின் நெடுஞ்சாலைகள், புகையிரதசேவை, வான்வழி மற்றும் கடல்சார் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைச்சுக்குப் பொறுப்பாக கம்சி குணரத்னம் செயற்படுவார்.
நோர்வே பாராளுமன்றத்தில் தொழிற்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 38 வயதான கம்சி குணரத்னம், நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டு, அன்றைய தினமே கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நோர்வே பிரதமர் யோனாஸ் கார தோரேவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரந்துபட்ட அமைச்சரவை மாற்றத்தின் ஓரங்கமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்துவந்த ஜோன்-இவர் நைகார்ட்டுக்கு பதிலாக கம்சி குணரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் தொடர்பில் கருத்துரைத்த பிரதமர் யோனாஸ் தோரே, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பொறுப்புக்களை கம்சி குணரத்னம் அரசியல் செயற்திறனுடனும் பொறுப்புணர்வுடனும் கையாண்டதாகவும், தற்போது நாட்டை ஒருங்கிணைக்கும் போக்குவதற்குத் துறைக்கு அவரே பொறுப்பாவார் என்றும் குறிப்பிட்டார்.





