எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய இன்று கூடுகிறது சட்டத்தரணிகள் சங்கம்
இக்குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்து அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசியல் நோக்கத்துடனான இவ்வாறான குற்றச்சாட்டுக்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருந்தது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய 'அரசியல் டீலுக்கு' அமைவாக செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை இன்றைய தினம் (29) காலை 9.30 மணிக்கு கொழும்பில் கூடவுள்ளது.
நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் விசேட பிரேரணையொன்றை நிறைவேற்றியது.
அதனையடுத்து மாகாணசபைத்தேர்தல் நடைபெறும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரியவுக்கு வாக்குறுதி அளித்திருப்பதாகவும், அதற்கு அமைவாகவே அவர் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு குறித்து தவறான விடயங்களை சமூகமயப்படுத்துவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குற்றஞ்சாட்டினார்.
இக்குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்து அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசியல் நோக்கத்துடனான இவ்வாறான குற்றச்சாட்டுக்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷனவின் கருத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை இன்றைய தினம் (29) காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் கூடவுள்ளது.





