காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிடம் தகவல்களை திரட்டிய ஐ.நா அறிக்கையாளர்
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேரஸ் இம்மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்த வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா, சுமார் ஒன்றரை வாரம் நாட்டில் தங்கியிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைக் குழுக்களாக சந்தித்து, பல்வேறு முறைகளிலும் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான பரந்துபட்ட தகவல்களைத் திரட்டியுள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், தந்தை செல்வா அரங்கில் 'நீதிக்கான நீள்பயணம்' எனும் மகுடத்தில் முதன்முறையாக சர்வதேச மாநாடொன்று நடைபெற்றது.
அதற்கமைய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் சட்ட ஆலோசகர் மற்றும் சர்வதேச - தேசிய பிரசார ஒருங்கிணைப்பாளருமான லக்ஷமன் சஞ்சீவின் விசேட அழைப்பின்கீழ் கற்கைசார் விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்த வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேரஸ் இம்மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கான முறையானதும், நம்பகமானதுமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அரச அதிகாரிகள் அவற்றை மறுதலிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனச் சுட்டிக்காட்டியதுடன், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளின் நீட்சியாக, அதுகுறித்து உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.
மேற்படி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த மாத இறுதியில் நாட்டை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் பணிக்குழு உறுப்பினர் அனா லொரெனா, கடந்த செவ்வாய்க்கிழமை (8) வரை நாட்டில் தங்கியிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை குழுக்களாகச் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்புக்களின்போது யுத்தகாலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் காணாமலாக்கப்பட்டவர்கள், வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள், கப்பம் கோரி கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள், கப்பமாகக் கோரப்பட்ட பெருந்தொகைப் பணத்தைச் செலுத்தியதன் பின்னரும் காணாமலாக்கப்பட்டவர்கள் எனப் பல்வேறு வழிமுறைகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் கதைகளையும் அனா லொரெனா கேட்டறிந்தார்.
தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடரில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழு அதன் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அவ்வறிக்கையில் மேற்படி விடயங்களும் உள்வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





