சத்துருக்கொண்டான் படுகொலைகள் தொடர்பில் சர்வதேச நீதி வேண்டும்
இப்படுகொலை உள்ளடங்கலாக கடந்தகால மீறல்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் தொடர்ந்து தோற்றுப்போயிருக்கின்றன.
சத்துருக்கொண்டான் படுகொலைகள் இடம்பெற்று 35 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை. இவ்விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்வதற்கும், அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மூலம் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் பேரவையின் உறுப்புநாடுகள் தலையீடு செய்யவேண்டும் என அப்படுகொலையில் உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
சத்துருக்கொண்டான் படுகொலைகளின் 36 ஆவது நினைவேந்தல் கடந்த வாரம் இடம்பெற்ற நிலையில், இதுபற்றி அப்படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கைப் படையினராலும், அதனுடன் இணைந்து துணைப்படைப் பிரிவினராலும் 186 ஈழத்தமிழ் பொதுமக்கள் மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலை 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுன் இலங்கைப்படை முகாமில் இடம்பெற்றது. அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் சுற்றியுள்ள கிராமங்களான பானச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில், சத்துருக்கொண்டான் ஆகிய பகுதிகள் துணைப்படைக் குழுக்களின் உதவியுடன் இல்ஙகைப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டன. அப்பகுதிகளில் வசித்த குடியிருப்பாளர்கள் கைதுசெய்யப்பட்டு இராணுவ முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர் காணாமலாக்கப்பட்டனர். அங்கிருந்து தப்பிச்சென்ற ஒருவர் ஊடாகவே பின்னர் இந்த உண்மை வெளிவந்தது.
இதனைத்தொடர்ந்து வலுப்பெற்ற சர்வதேச அழுத்தங்களை அடுத்து இதுபற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தார். இருப்பினும் அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அந்த ஆணைக்குழுவினால் பிரதான குற்றவாளிகள் அடையாளங்காணப்பட்டு, பெயரிடப்பட்ட போதிலும், இன்னமும் நீதி நிலைநாட்டப்படாமல் 35 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இப்படுகொலை உள்ளடங்கலாக கடந்தகால மீறல்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் தொடர்ந்து தோற்றுப்போயிருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயத்தில் அர்த்தமுள்ள நடவடிக்கை ஊடாக நீதியை நிலைநாட்டுவதற்குத் தலையீடு செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் பேரவையின் உறுப்புநாடுகளுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.
மேலும் சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுனில் இலங்கை இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதி, படுகொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய ஏனைய இடங்களை அகழ்வாராய்வு செய்வதற்கும், அப்பணிகள் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தோடு இவ்விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





