சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிகளை திருத்துவதற்கு நடவடிக்கை
புதிதாக சிம் அட்டைகளைக் கொள்வனவு செய்யும் நபர்கள் தங்களின் நேரடி புகைப்படத்தை வழங்குவது உட்பட மேம்படுத்தப்பட்ட அடையாள சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
முறையற்ற வழிகளில் பெறப்படும் கையடக்கத் தொலைபேசி சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்ககையிலேயே இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் உட்பட சட்ட நடைமுறைப்படுத்தல் நிறுவனங்கள் எமக்கு சுட்டிகாட்டியுள்ளன. அத்துடன் இதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தன.
இதனையடுத்து சிம் அட்டைகளை விநியோகிக்கும் விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நடப்பு ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகளின் கீழ் புதிதாக சிம் அட்டைகளைக் கொள்வனவு செய்யும் நபர்கள் தங்களின் நேரடி புகைப்படத்தை வழங்குவது உட்பட மேம்படுத்தப்பட்ட அடையாள சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 2027ஆம் ஆண்டிற்குள் நாட்டில் கையடக்கம் தொலைபேசி பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த புதிய நடைமுறையானது சாதாரன பொதுமக்களுக்கோ அல்லது நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கோ எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்தாத வகையில் மிகவும் சீராகச் செயற்படுத்தப்படும். நாட்டில் சிம் அட்டைகள் சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்துவதைக் குறைப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
தற்போது நாட்டில் சுமார் 30 மில்லியன் சிம் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அதேவேளை தொலைத்தொடர்புச் சேவைகளின் தரம் தொடர்பில் பயனாளர்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்nறுகின்றன. தற்சமயம் சம்பந்தப்பட்ட சேவை வழங்குநர்கள் வழங்கும் தரவுகளின் அடிப்படையிலேயே நாம் செயற்பட்டு வருகிறோம்.
எனினும், சேவைகளின் தரத்தை அதிக துல்லியத்தன்மையுடன் சுயாதீனமாக நேரடியாகக் கண்காணித்து உறுதிப்படுத்துவதற்கான பிரத்தியேகக் கட்டமைப்பு எதுவும் தற்போது எம்மிடம் இல்லை. எதிர்காலத்தில் அதற்கான முறையான அமைப்பொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத்தெரிவித்தார்.





