செம்மணி புதைகுழியில் புதியதொரு என்புக்கூட்டுத்தொகுதி அடையாளம்
அகழ்வு பணிகள் 1.5 அடி தொடக்கம் 2 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, என்பு கூட்டு தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டத்தரணி ஞா.ரனீதா தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் நாள் பணிகள் 29-04-2026 அன்று நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அகழ்வு பணிகளின் போது ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட இரு என்பு கூட்டு தொகுதிகளின் பகுதியளவான என்பு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அகழ்வு பணிகளின் போது சில என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவற்றை சுத்தம் செய்த பின்னரே எத்தனை என்பு கூடு என்பதனை உறுதியாக கூற முடியும்.
அகழ்வு பணிகள் 1.5 அடி தொடக்கம் 2 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த ஆழத்தில் அகழ்வு பணிகள் மேற்கொண்டபோது என்பு கூடுகள் மீட்கப்பட்டன.
அகழ்வு பணிகளின் போது ஓர் இடத்தில் சந்தேகத்திற்கு உரிய முறையில் கரியநிற மண் காணப்பட்டது. அதனால் , அதனை அரித்தட்டு மூலம் அரித்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் அகழ்வு பணிகளின் போது சிறிய வலை போன்ற பொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதென மேலும் தெரிவித்தார்.





