2026 இன் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி - அமைச்சர் அனில்
ரிபொருளை சேமித்து வைப்பதற்கான போதிய வசதிகள் நம்மிடம் இல்லை. அது குறித்தும் நாம் சில முடிவுகளை எடுத்து வருகிறோம்.
அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் பல துறைகளே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன என்று சுருக்கமாகக் கூறலாம். பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சரியான கொள்கைகளைப் பேணி வந்ததன் மூலம், எம்மால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது. 2026 இன் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தது. இது பொருளாதார வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது என நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கையின் கடன் தரப்படுத்தல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து 29-07-2026 அன்று ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர்ஸ் நிறுவனத்தினால் 2026 ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய தரவரிசைப்படுத்தலின்படி, இலங்கையின் கடன் தரவரிசையை முந்தைய மட்டத்திலேயே ஸ்திரமாகப் பேணிச் செல்வதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது.
'தித்வா' சூறாவளியின் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழல் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும், பொருளாதாரப் பாதையை மாற்றாமல் முன்னோக்கி கொண்டு சென்றதன் காரணமாகவே இந்த ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடிந்தது என்பதைப் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இதனை ஒரு சிறப்பு வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம்.
அத்துடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு முக்கியமான பரிமாற்றம் மற்றும் மாற்றத்தக்க நிலை தரவரிசையானது குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம்,முதலீட்டாளர் ஒருவர் தான் ஈட்டும் இலாபத்தை மீண்டும் தனது நாட்டிற்கு கொண்டு செல்வதற்கான திறன் மற்றும் தாம் பெற்ற கடன்கள், வட்டிகளைச் செலுத்துவதற்காக உள்ளூர் நாணயத்தை வெளிநாட்டு நாசமாக மாற்றிக்கொள்வதற்கான திறன் ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தான 'சிசிசி' மட்டத்தில் இருந்த இத்தரவரிசை, 2025 இல் 'சிசிசி பிளஸ்' ஆகவும், 2026 ஆம் ஆண்டாகும்போது பி(-) வரையிலும் முன்னேறியுள்ளது. குறிப்பாக, பேரண்ட பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாகவே இந்நிலைமை வளர்ச்சியடைந்தது என்று கூற வேண்டும். தற்போது ஸ்திரமற்ற தன்மையிலிருந்து வெளியேறி, குறிப்பாக வெளிநாட்டு செலாவணி திரவத்தன்மை மற்றும் கையிருப்புகளைக் கட்டியெழுப்புதல் ஆகிய காரணிகள் இதற்கு உதவியுள்ளன. எனவே, இந்த பி(-) நிலையை சிறப்பாக மதிப்பிட வேண்டும்.
இந்த வெளிநாட்டு செலாவணி கையிருப்பு, இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது பொருளாதாரத்தைச் சுருக்குவதன் மூலமோ கட்டியெழுப்பப்படவில்லை. அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் இயல்பாக நடைபெற அனுமதித்து, .இலங்கை மத்திய வங்கியின் மூலோபாய தலையீட்டின் மூலம் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணி கையிருப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதைப் பிரகடனப்படுத்துவது சர்வதேச அமைப்புகளே தவிர, சமூக வலைத்தளங்களில் பேசப்படுபவை அல்ல. எனவே இது சிறப்பாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கைக்கான இந்த பி (-) நிலையை வழங்குவதற்கு, சர்வதேச நிதி நிறுவனத்தால் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் கடனாளர்களுடனான தொடர்பு ஆகியவையே காரணமாக அமைந்துள்ளன.
கடந்தகால அனுபவங்களின்படி, நமது நாட்டின் கடன் வெளிப்படைத்தன்மை எவ்வாறு இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. சில கணக்காய்வு அறிக்கைகளில் கூட, பெறப்பட்ட கடன்கள் எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது தெரியாத நிலைகளே இருந்தன. கடன் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை சீர்குலைந்துவிடும். ஆனால், 2025 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது முதலீட்டாளர்களுடனான தொடர்பைக் கட்டியெழுப்புவதிலும், கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் இலங்கை மிகப்பாரிய, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை தற்போதைய அறிக்கை காட்டுகிறது.
அதன்படி, வழங்கப்பட்ட மொத்த 50 புள்ளிகளில் 43.67 புள்ளிகளைப் பெற இலங்கையால் முடிந்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 6.3 புள்ளிகள் வளர்ச்சியாகும். இதன் மூலம், 2026 ஆம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட நாடுகளுக்கு இடையே இலங்கை 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது,அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் பல துறைகளே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன என்று சுருக்கமாகக் கூறலாம். பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சரியான கொள்கைகளைப் பேணி வந்ததன் மூலம், எம்மால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது. 2026 இன் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தது. இது பொருளாதார வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது.
அதேபோல் , அரசாங்க சேவைகளைப் பேணுவதற்கும், அரச முதலீடுகளை மேற்கொள்வதற்கும் வருவாயைத் திரட்ட வேண்டும். அவ்வாறு திட்டமிட்டபடி வருவாயைச் சேகரிக்கிறோமா என்பது இந்த நிதி ஒழுக்கத்தின் முக்கிய அம்சமாகும். அரசாங்கம் ஆட்சியமைத்த நாள் முதல் இன்று வரை வருவாய் சேகரிப்பின் திறனை நாம் தினமும் கண்காணித்து வருகிறோம். நமது இலக்குகள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
உதாரணமாக, 2026 ஜூலை மாத நிலவரப்படி, ஆண்டின் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் இலக்குகளில் 63.5சதவீதத்தை அரசாங்கத்தால் பூர்த்தி செய்ய முடிந்துள்ளது. இதன் மூலம் 2026 இல் திட்டமிடப்பட்ட வருவாய் இலக்குகளை எளிதாக அடைவதோடு, அதைத் தாண்டவும் முடியும். முறையான திட்டமிடல்,நிதி ஒழுக்கம், வருவாய் சேகரிப்பை அதிகரிக்கும் அதேவேளையில்,வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைகள் மக்களுக்காகவே செலவிடப்படும் என்ற உத்தரவாதத்தையும் தருகிறோம்.
அதேபோன்று வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களாக ஒதுக்கப்பட்ட நிதியைப் பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. நிதியைச் செலவிடும் பொறிமுறையில் சில சிக்கல்கள், திறனின்மை மற்றும் சில தடைகள் இருந்தபோதிலும்,நிதி ஒழுக்கம் மிக உயர் மட்டத்தில் பேணப்பட்டமையும் வருவாய் சேகரிப்பும் இதற்குப் பங்களித்துள்ளன.
ஆளுகை மற்றும் அரசியல் சவால்கள் போன்ற அனைத்தையும் நம்மால் எளிதில் வெற்றி கொள்ள முடியும். ஆனால்,கட்டமைப்பு ரீதியாக பிணைக்கப்பட்டுள்ள சில சவால்களும், வெளிப்புறமாக கட்டுப்படுத்த முடியாத சில சவால்களும் உள்ளன. கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் எடுத்த அலட்சியமான மற்றும் தேவையற்ற கடன்கள் காரணமாகஇ நமது திறைசேரி பெருமளவிலான கடன் வட்டியைச் செலுத்த வேண்டியிருப்பதே இதில் பிரதான சவாலாகும். 2025 ஆம் ஆண்டில் மட்டும் வட்டியாக 2500 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த வேண்டியிருந்தமை அபிவிருத்திப் பணிகளுக்குப் பெரும் தடையாக உள்ளது.
நீண்டகால திறைசேரிப் பிணைப்பத்திரங்கள் பக்கம் நகர்ந்து, அவற்றை குறைந்த ஸ்திரமான வட்டி விகிதங்களில் பெற்று, கடன் நிலைபேற்றுத் தன்மையைப் பேணுவதற்கான அறிகுறிகளை இலங்கை காட்டியுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக உள்ள தடை என்னவென்றால், இந்த மொத்த கடன்களில் சில கடன்கள் மிகவும் தோல்வியடைந்த, பலனளிக்காத திட்டங்களுக்காகப் பெறப்பட்டவையாகும். இது ஒரு சவாலாக இருந்தாலும்இ நாங்கள் அதனை முகாமைத்துவம் செய்து வருகிறோம்.
மறுபுறம், நாம் எதிர்கொள்ள வேண்டிய இயற்கை பேரழிவுகள் மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படும் பாதிப்பாக இருக்கலாம். இவை அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடிய மிக வலுவான, நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளாதாரம் நமக்குத் தேவை. அந்த நிலையை நாம் குறிப்பிட்ட அளவிற்கு அடைந்துள்ளோம். குறிப்பாக எரிசக்தி சந்தையில் ஏற்பட்ட தாக்கம் , இலங்கை முக்கியமாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருளையே போக்குவரத்துத் துறைக்கு பயன்படுத்துகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எதிர்காலத்தில் இதில் சில கட்டமைப்பு மாற்றங்களை நாம் செய்ய வேண்டியிருக்கும். தற்போது இந்த எரிபொருள் சார்ந்திருப்பில் சில சவால்கள் உள்ளன. மேலும், எரிபொருளை சேமித்து வைப்பதற்கான போதிய வசதிகள் நம்மிடம் இல்லை. அது குறித்தும் நாம் சில முடிவுகளை எடுத்து வருகிறோம்.
இந்த வெற்றிகளை அடைவதற்கு சரியான முடிவுகள்,கொள்கை ஒருமைப்பாடு,அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சரியான ஆளுகை ஆகியவையே காரணமாக இருந்தன என்பதைக் குறிப்பிட வேண்டும். அரசாங்கம் தனது பணிகளை முன்னோக்கி கொண்டு செல்லும்போது அனைவரின் பங்களிப்பும் கிடைத்தால், இந்த ஸ்திரத்தன்மையையும் வெற்றியையும் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மக்களுக்குத் தேவையான பலன்களை வழங்க முடியும் என்றார்.





