செம்மணி தொடர்பான குற்றவியல் விசாரணைகளை இலங்கை ஆரம்பிக்கவேண்டும்: ஜொஹான் சூஃபி
இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகமோசமான மீறல்களுக்கான ஒரு சான்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அகழ்வுப்பணிகளை விசாரணை நடவடிக்கைகள் என்று ஒருபோதும் அர்த்தப்படுத்தமுடியாது. இவை இரண்டும் இருவேறுபட்ட செயன்முறைகளாகும். எனினும் செம்மணி மனிதப்புதைகுழி ஊடாக இதுவரை கிடைக்கப்பெற்றிருக்கும் தகவல்கள் மற்றும் ஏற்கனவே மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் அளிக்கப்பட்ட வாக்குமூலம் என்பவற்றின் அடிப்படையில் குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான பின்னணி இங்கு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையான இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் தலைவர் ஜொஹான் சூஃபி தெரிவித்துள்ளார்.
அண்மையில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தினால் 'செம்மணி மனிதப்புதைகுழி: நாங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு ஜெனிவாவில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 6.00 மணிக்கு நிகழ்நிலை முறைமை ஊடாக விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜொஹான் சூஃபி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அகழ்வுப்பணிகளை விசாரணை நடவடிக்கைகள் என்று ஒருபோதும் அர்த்தப்படுத்தமுடியாது. இவை இரண்டும் இருவேறுபட்ட செயன்முறைகளாகும். அகழ்வு என்பது உடல்களை நிலத்திலிருந்து அகழ்ந்து எடுத்து, அவற்றுக்கு கௌரவமான இறுதிச்சடங்களை நடத்துதலும், விசாரணை என்பது 'என்ன நடந்தது? யாரால், எப்போது நிகழ்த்தப்பட்டது?' என்பதைக் கண்டறிவதாகும்.
அதேபோன்று செம்மணி ஊடாக தற்போது வந்தடைந்திருக்கும் தகவல்களின் தன்மையைப் பார்க்கவேண்டும். குற்றவியல் விசாரணை என்பது ஒருவரது இறப்பு எவ்வாறு இடம்பெற்றிருக்கிறது என்பதிலிருந்தே ஆரம்பமாகும். அதன்படி செம்மணி ஊடாகக் கிடைத்திருக்கும் தகவல்கள், அங்கு புதைக்கப்பட்ட மனிதர்களின் இறப்பு இயற்கையானது அல்ல என்பதேயாகும். அதுமாத்திரமன்றி குற்றம் புரிந்தவர்கள், 'ஆம், கொல்லப்பட்ட பலர் இங்கு புதைக்கப்பட்டனர்' என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். எனவே ஒரு குற்றவியல் விசாரணையை ஆரம்பிப்பதற்கு அவசியமான பின்னணி இங்கு இருக்கிறது.
2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகமோசமான மீறல்களுக்கான ஒரு சான்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை அரசு முறையான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுப்பதுடன் மாத்திரமன்றி, மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தவேண்டும். இதனை இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் தயாராக இருக்கிறது.





