புதிய இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன
மேற்கு சஹாராவில் அமைதிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்புப் பணியில் இராணுவ அவதானியாகவும் சேவை ஆற்றியுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஓய்வு பெற்றுள்ள நிலையிலேயே புதிய இராணுவத்தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்புதிய நியமனத்திற்கு முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், இலங்கை இராணுவ தன்னார்வப் படையின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் அதிகாரிகளுக்கான பயிற்சிப் பிரிவில் இணைந்த இவர், தியத்தலாவயில் உள்ள இலங்கை இராணுவப் பீடத்தில் தனது ஆரம்பப் பயிற்சியைப் பூர்த்தி செய்தார். அதனைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு இரண்டாம் லெப்டினன்ட்டாகப் பணி உயர்வு பெற்று, இலங்கை பீரங்கிப் படையில் அதிகாரியாகத் தனது இராணுவப் பயணத்தைத் தொடர்ந்தார்.
தனது நீண்டகால இராணுவச் சேவையில் இலங்கை பீரங்கிப் படையின் 6 ஆவது களப் பிரிவின் பேட்டரி கொமாண்டர், இலங்கை இராணுவப் பீடத்தின் பயிற்றுவிப்பாளர் மற்றும் முதன்மைப் பயிற்றுவிப்பாளர், 211 காலாட்படை பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், இராணுவத் தலைமையகத்தின் பொதுப் பணியாளர் அதிகாரி, இராணுவத் தளபதியின் இராணுவ உதவியாளர், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியின் செயலாளர், 16 ஆவது பீரங்கிப் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி, 551 காலாட்படை பிரிகேட்டின் கட்டளை அதிகாரி மற்றும் 23 காலாட்படைப் பிரிவின் பொது அதிகாரி கட்டளையாளர் ஆகிய முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
மேலும், இராணுவ ஊடகப் பணிப்பாளராகவும், இராணுவப் பேச்சாளராகவும், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அலுவலகத்தின் தலைமை அதிகாரியாகவும், கிழக்கு பிராந்திய பாதுகாப்புப் படைகளின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை இராணுவத்தின் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ள இவர், மேற்கு சஹாராவில் அமைதிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்புப் பணியில் இராணுவ அவதானியாகவும் சேவை ஆற்றியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள கடற்படை முதுகலைக்கூடத்திலிருந்து பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை மற்றும் வியூகத்தில் சிறப்புப் பட்டத்துடன் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுகலைப்பட்டத்தையும், களனிப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுகலைப்பட்டத்தையும் பெற்றுள்ள இவர், இலங்கை, சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உயர்மட்ட தொழில்முறை இராணுவப் பயிற்சிகளையும் முடித்துள்ளார்.
இராணுவச் சேவையில் வெளிப்படுத்திய வீரத்திற்காகவும் அர்ப்பணிப்பிற்காகவும் இருமுறை 'ரண சூர பதக்கம' விருதையும் 'உத்தம சேவ பதக்கம' விருதையும் பெற்றுள்ள மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, "The Impact of Changing External Conditions on Counter Insurgency: The Sri Lankan Experience" எனும் ஆய்வு நூலையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





