10 எர்பஸ் விமான கொள்வனவு; நமலை பிரதான சந்தேகநபராக பெயர் குறிப்பிடுமாறு சட்டமா அதிபர் பணிப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரை சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிட்டிருந்தனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 10 எர்பஸ் விமான கொள்முதலின் போது, ஐரோப்பிய நிறுவனமொன்றிடமிருந்து 2 இலட்சம் அமெரிக்க டொலர் பணத்தை இலஞ்சமாக பெற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை பிரதான சந்தேகநபராக பெயர் குறிப்பிடுமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு பெறப்பட்ட பணம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுகச்கு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகளால் தெரிவித்துள்ளனர். அதற்கமைய இந்த மோசடி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்து வரும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ், நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயர் குறிப்பிடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேற்படி மோசடி சம்பவம் குறித்து இரகசிய பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரை சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிட்டிருந்தனர்.
அதற்கமைய சந்தேகநபரான கபில சந்திரசேன கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் குறித்த பிணை உத்தரவு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்ட நிலையில் அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அவரது மைத்துனரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அரவிந்த டி சில்வாவின் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கில் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.





