கொழும்பு மேற்கு கடலில் வர்த்தக கப்பலிலிருந்து 17 கொள்கலன்கள் விழுந்து விபத்து
அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் நீரியல் வளத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள மேற்கு கடலில் பயணித்த வர்த்தக கப்பல் ஒன்றிலிருந்து 17 வெற்றுக் கொள்கலன்கள் திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
கடலில் மிதந்து கொண்டிருக்கும் இந்தக் கொள்கலன்கள் கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடிய அபாயம் காணப்படுவதால், அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் நீரியல் வளத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்விபத்து கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில், இடம்பெற்றுள்ளது. தற்போது அப்பகுதியில் நிலவிவரும் கடல் நீரோட்டத்தின் தன்மையைக் கருத்திற் கொள்ளும்போது, கடலில் மிதக்கும் இந்த வெற்று கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான பரந்த கடற்கரைப் பகுதிகளை நோக்கி மிதந்து வர அதிக வாய்ப்புள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணங்களில் ஈடுபடும் அனைத்து நீண்டநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களும் மீனவர்களும் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன், கடலில் மிதக்கும் கொள்கலன்கள் ஏதேனும் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக அது குறித்து மீனவ மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் வானொலிச் செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.





