மன்னார், முல்லைத்தீவு திருகோணமலையில் அபிவிருத்தி திட்டங்கள்
இந்த இருதய சிகிச்சை பிரிவு கட்டிடமானது, 08 மாடிகளைக் கொண்டுள்ளதுடன், 2028 மே மாதமளவில் இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ளது.
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் நேற்று ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேபோல் ஜப்பான் அரசியல் நிதியுதவியுடன் திருகோணமலை வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளும், அநுராதபுரம் வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு 16-09-2026அன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 7148 மில்லியன் ரூபா செலவில் அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் பொது வைத்தியசாலையின் புதிய கட்டத்தை நிர்மாணிக்கும் அபிவிருத்தி கருத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
மன்னார் பொது வைத்தியசாலை
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபா நன்கொடை நிதியுதவியுடன் கட்டியெழுப்பப்படும் இவ்விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அனைத்து நவீன வசதிகளுடனும் அமைக்கப்பட்டு மன்னார் மக்களின் சுகாதார சேவைகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் நிறைவடையும் போது, மன்னார் மக்கள் அவசர அதிர்ச்சி சிகிச்சை மற்றும் ஏனைய விசேட சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக கொழும்பு அல்லது ஏனைய பிரதான நகரங்களுக்குப் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதேவேளை, இச்சேவைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அடிக்கல் நாட்டல் நிகழ்வின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மாகாண ஆளுநரின் கரங்களை பற்றி, அவரை அடிக்கல் நாட்டுமாறு பணித்தார்.அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததன் பின்னர் ஜனாதிபதி அனுர குமார திஸාநாயக்க வைத்தியசாலை ஊழியர்களுடன் சுமுகமாக உரையாற்றினார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு), பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி மற்றும் யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு பொது வைத்தியசாலை
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நான்கு மாடிகளைக் கொண்ட புதிய மருத்துவ விடுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
திருகோணமலைக்கான விஜயம்
கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய இருதய சிகிச்சைகளுக்கான வசதிகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய இருதய சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.
இருதய நாடி நோய்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை வலுப்படுத்தும் வகையில், ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஊடாக சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்,2,403 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதிநவீன அறுவை சிகிச்சை கூடங்கள்,வெளிநோயாளர் பிரிவுஇ உள்நோயாளர் சிகிச்சை வசதிகள் மற்றும் முழுமையான ஆய்வுகூடங்களைக் கொண்ட இந்த இருதய சிகிச்சை பிரிவு கட்டிடமானது, 08 மாடிகளைக் கொண்டுள்ளதுடன், 2028 மே மாதமளவில் இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ளது.
இதன்போது நினைவுப் பலகையை திறந்து வைத்து, கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, வைத்தியசாலை பணிக்குழாமுடன் சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.





