கோட்டாபய ராஜபக்ஷ அடுத்து தயாராக இருக்க வேண்டும்: சமீர பெரேரா
ரதான சந்தேகநபர்களில் ஒருவரான சாரா ஜெஸ்மின் இறந்துவிட்டதாக காட்டுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவும் சுரேஷ் சலேவும் பல்வேறு வழிகளில் அழுத்தங்களைப் பிரயோகித்தனர் என்பதும் வெளிப்படையாக நிரூபணமாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்து சட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். தொடர் கைது நடவடிக்கைகளின் வரிசையில் இன்னும் பலர் உள்ளதாக இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகத் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடமை தவறியமை மற்றும் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் பிரதானிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொறுப்புக்கூற வேண்டும்.
நேற்று இரவு தொடர் கைது நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. இன்னும் குறைந்தபட்சம் 5 பேராவது இந்த வரிசையில் நிற்கிறார்கள். இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஷ, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, பிரதான புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே, தேசபந்து தென்னகோன் மற்றும் அசாத் மௌலானா உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் தப்பித்துக்கொள்ள முடியாது.
கடந்த வாரம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், தமது கடமையைத் தவறும், திட்டமிட்டோ அல்லது திட்டமிடாமலோ சதித்திட்டம் ஒன்றுக்குத் துணையாகச் செயற்படும் எந்தவொரு அரச அதிகாரிக்கும் கிடைக்கும் அதிகபட்ச தண்டனை என்னவென்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் கௌரவிக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூரத் தாக்குதலானது அரசியல் மற்றும் இராணுவ சதித்திட்டத்தின் வெளிப்பாடாகும். தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் ஆட்சியைத் தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ, இந்தத் தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலேவை அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக்கி, அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். இதன் மூலம் ஆதாரங்களை அழிப்பதற்கும், ஷானி அபேசேகர போன்ற நேர்மையான புலனாய்வு அதிகாரிகளைப் பழிவாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், தெஹிவளையில் குண்டுதாரியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் சுரேஷ் சலே மற்றும் வெலிகம சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது. மேலும், பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சாரா ஜெஸ்மின் இறந்துவிட்டதாக காட்டுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவும் சுரேஷ் சலேவும் பல்வேறு வழிகளில் அழுத்தங்களைப் பிரயோகித்தனர் என்பதும் வெளிப்படையாக நிரூபணமாகியுள்ளது.
மேலும், இது தொடர்பில் வெளிநாட்டு உளவுத்துறையிடமிருந்து கிடைத்த முன்னெச்சரிக்கைத் தகவல்களை மூடிமறைக்கவும் திரிபுபடுத்தவும் நடவடிக்கை எடுத்த அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவை பாராமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக விடாமல் அன்றைய ஆட்சியாளர்கள் தடுத்துப் பாதுகாத்தனர்.
இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்த இராணுவ மற்றும் அரசியல் சூத்திரதாரிகள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் சட்டத்தின் முன் தண்டனையைப் பெறுவது உறுதி. அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது. தற்போதைய அரசாங்கம் அநுர குமார தலைமையில் இயங்கும் நிலையில், எந்தவொரு முதலாளித்துவக் கோட்பாடுகளுக்கும் அடிபணியாமல், இந்தக் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.





