சம்பூரில் தொடர் அகழ்வுக்கு நீதிமன்றம் உத்தரவு
இக்காணி அரச காணியாக உள்ள போதும் இங்கு ஒரு மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று இம்மாநாட்டில் தொல்பொருள் திணைக்கழகம், பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது.
மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய அகழ்வுகள் கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையை பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் மூதூர் நீதிவான் திருமதி.தஸ்னீம் பெளஸான் 06-08-2025 அன்று உத்தரவிட்டுள்ளார்.மேலும் இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி தொடர்ந்தும் நடத்துவது என்றும் நீதிமன்று தீர்மானித்தது.
சம்பூர் காணியில் கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளில் ஒன்று 25 வயதிற்கு குறைந்த ஆண் ஒருவருடையது என்றும் மற்றையது 25 இற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவருடையது, அடுத்தது 40 இற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட ஒருவருடையது என்றும் வழக்கு மாநாட்டின் போது மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை முன்வைத்தார்.
வழக்கு மாநாட்டில் சட்டவைத்திய அதிகாரி கூறுகையில்,
இந்த இடம் மயானம் என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எச்சங்களுக்குரியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா?அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் மூலம் மரணம் நிகழ்ந்ததா? என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
இக்காணி அரச காணியாக உள்ள போதும் இங்கு ஒரு மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று இம்மாநாட்டில் தொல்பொருள் திணைக்கழகம், பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது. இவ் அறிக்கைகளை ஆராய்த பின்னரே நீதிமன்று அகழ்வு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கு மாநாட்டில் மாவட்ட சட்டவைத்திய அதிகாரி,தொல்பொருள் திணைக்கழக அதிகாரி,புவிசரிதவியல்த்துறை அதிகாரி,பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர்,தேசிய கண்ணிவெடி அகற்றம் நிறுவனத்தினர்,மெக் மிதி வெடி அகற்றும் நிறுவனத்தினர்,பிரதேச செயலாளர்,பிரதேச சபைச் செயலாளர்,காணாமல் போனோர் தேசிய செயலகத்தின் சட்டத்தரணி,பிரதேச காணி உத்தியோகத்தர், பிரிவிற்கான கிராம சேவை அலுவலர் ஆகியோர் கலந்நு கொண்டனர்.





