சிறிதரன் எம்.பி.மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி.கேரிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் கட்சிக்கு முரணானதாகவே காணப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் கட்சிக்கு முரணானதாகவே காணப்படுகிறது.போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இவ்வாறு செயற்படும் போது இளம் தலைமுறையினரை எவ்வாறு கட்சியால் வழிநடத்த முடியும்.ஆகவே இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கவனம் வேண்டும்.இல்லாவிடின் இலங்கைத் தமிழரசுக் கட்சியை அழிக்கும் செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்னெடுப்பாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் எழு;ப்பிய கேள்விகளுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதன்போது சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு வருமாறு பதிலளித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து எமது அபிப்ராயத்தை குறிப்பிட முடியாது. குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன இன்று கோமாளியை போல் சுற்றித்திரிகிறார்.இவர் தான் முப்படைகளுக்கும் பொறுப்பாக இருந்தார். ரணில் விக்கிரமசிங்க அப்போது பிரதமராக பதவி வகித்தார். இந்த தாக்குதல்கள் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பயனடைந்தார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் குண்டுத்தாக்குதல் விவகாரத்துக்காக சிறையில் உள்ளார்.இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னரே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முழுமையான விடயங்களை அறிய முடியும்.கடந்த காலங்களை காட்டிலும் தற்போது பதவிநிலைகளை பாராமல் நீதிமன்றங்கள் ஊடாக தீர்ப்புகள் வழங்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தல், அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில் வாக்குறுதியளிக்கப்பட்டன. இருப்பினும் இன்றுவரை இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
புதிய அரசியலமைப்பினை 03 ஆண்டுக்குள் உருவாக்குவது சாத்தியமற்றது என்பதை நாங்கள் அறிவோம்.அது யதார்த்தமானது. இருப்பினும் அரசியலமைப்பு உருவாக்கத்துக்குரிய நடவடிக்கைகளையேனும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இருப்பினும் புதிய யாப்புருவாக்கத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளைக் கூட முன்னெடுக்கவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. ஜி.எஸ்.பி வரிச்சலுகை நெருக்கடிக்குள்ளாகும் போது தான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாரதூரத் தன்மை அரசாங்கத்துக்கு விளங்கும். தேர்தல் காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டார்கள். ஆனால் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். வுடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைகள் வசமுள்ள தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே தமிழ் பேசும் 06 அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பின்னரே தற்போது தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைந்துள்ளன. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நாளை (3) ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.
மாகாணசபைத் தேர்தல்
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இருப்பினும் இதுவரையில் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்தலாம் என்பது பற்றி ஆராய்வதற்கு பாராளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன்.
பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நான் முன்வைத்த தனிநபர் பிரேரணையை நிறைவேற்றினால் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம். சட்டமா அதிபர் திணைக்களமும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் எனது தனிநபர் பிரேரணைக்கு அமைய தேர்தலை நடத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.
மாகாணசபைத் தேர்தலை 1987 ஆம் ஆண்டு பழைய விகிதாசாரத் தேர்தல் முறையில் நடத்துவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் செய்யாமல், புதிய தேர்தல் தொகுதிகளை உருவாக்காமல் பழையத் தேர்தல் முறைமையில் விகிதாசார தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இதன்போது பெண் மற்றும் இளைஞர் 25 சதவீத ஒதுக்கீடு வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிதரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அடிக்கடி கருத்து தெரிவித்து வருவதை அவதானிக்க முடிகிறது. தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் கூட்டிணைவு பற்றி தனக்கு தெரியாது என்று அவர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நிகழ்நிலை கூட்டத்தில் அவரும் கலந்துக் கொண்டார்.
அப்போது ஆறு அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி பேசப்பட்டது. புதிய ஒன்றிணைவுக்கான மூன்று பிரதான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டது. எந்த விடயங்களும் இரகசியமாக பேணப்படவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணையும் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையை மாத்திரம் முன்னிலைப்படுத்திச் செயற்பட முடியாது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் கட்சிக்கு முரணானதாகவே காணப்படுகிறது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இவ்வாறு செயற்படும் போது இளம் தலைமுறையினரை எவ்வாறு கட்சியால் வழிநடத்த முடியும். ஆகவே இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கவனம் செலுத்த வேண்டும்.இல்லாவிடின் இலங்கைத் தமிழரசுக் கட்சியை அழிக்கும் செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்னெடுப்பார் என்பதை தெளிவாக குறிப்பிட முடியும் என்றார்.





