ஜனாதிபதி அநுரவை நேரில் சந்திப்பதற்கு அனுமதி கோரி சிறிதரன் எம்.பி அவசர கடிதம்
வட,கிழக்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் சமகால நெருக்கடிகள், தொடர்பிலும், ஈழத்தமிழர்கள் அரசியல் சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக தங்களை நேரில் சந்தித்து உரையாடுவது காலப்பொருத்தமானதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றேன்.
அரசாங்கத்துக்கும், வட,கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பித்தல் உட்பட ஏழு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் நேரில் சந்திப்பதற்கான நேர ஒதுக்கீட்டைக் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வட,கிழக்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் சமகால நெருக்கடிகள், தொடர்பிலும், ஈழத்தமிழர்கள் அரசியல் சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக தங்களை நேரில் சந்தித்து உரையாடுவது காலப்பொருத்தமானதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றேன்.
குறித்த சந்திப்பில், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர அரசியற்தீர்வு முயற்சிகள் குறித்த பேச்சுக்களை ஆரம்பித்தல், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள இராணுவ மற்றும் தனியார் காணிகள் விடுவிப்பு, யாழ்.மாவட்டம் மயிலிட்டியில் உள்ள பகுதிகளின் மீள்குடியேற்றம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள், மக்களின் இயல்பு வாழ்வைப் பாதிக்கும் வகையில் சிவில் நடைமுறைகளில் நிலவும் இராணுவத்தலையீடுகள் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்படுவதற்கு எதிர்பார்க்கின்றேன்.
இலங்கை நாட்டின் தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் கரிசனையோடிருக்கும் தங்களுடன் மேற்குறித்த விடயங்கள் சார்ந்து தமிழ்த் தரப்பின் பிரதிநிதியாக கலந்துரையாடுவதன் மூலம் குறித்த விடயங்களுக்கான தீர்வுகளை எட்ட முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அத்தகைய சந்திப்பொன்றை தங்களுக்குப் பொருத்தமான நேரத்தில் ஒழுங்கமைப்பதற்கு ஆவன செய்யுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.





