ஜே.வி.பி. பெயரை காக்க விரும்பினால், பொதுஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும்: மனோ கணேசன்
விசித்திரமாக,பொதுசன வாக்கெடுப்பு அவசியமா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு, இந்த பதவிக்கால நீடிப்பால் நேரடியாக பயன்பெற உள்ள நீதிபதிகளுக்கே உள்ளது.
நீதி,பொறுப்பு கூறல் மற்றும் ஜனநாயக ஆட்சியை தமது அரசியல் அடையாளமாக கொண்டு வளர்ந்த மக்கள் விடுதலை முன்னணி தனது பெயரை காக்க விரும்பினால், பொதுஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நிர்வாக நடவடிக்கை என்று நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்க அரசாங்கம் முயல்கிறது. ஆனால் அரசாங்கத்தின் இந்த விளக்கம், ஒரு மோசடி என முழு சட்ட துறையே கூறுகிறது.
வழக்கு நிலுவையை காரணமாக காட்டி நீதித்துறை அமைப்பை மாற்ற முயல்வது, நீதித்துறை சீர்திருத்தம் அல்ல. அது அரசியலமைப்பை திருத்தி அரசியல் நோக்கங்களை அடைய மேற்கொள்ளப்படும் முயற்சி, சட்ட ஆட்சிக்கு எதிரான சதி.இதை தான் அன்று மஹிந்த ராஜபகப்ஷ செய்தார். அதை அன்று எதிர்த்த இந்த ஆட்சியாளர்கள் அதையே இன்று செய்யலாமா?
நீதிமன்ற வழக்கு தேக்கத்தை தீர்ப்பது அவசியமானது ஆகும். நீதிவான்கள், நீதித்துறை சேவையின் உறுப்பினர்கள் மற்றும் சட்டத்துறை வல்லுநர்கள் ஏற்கனவே நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை உள்ளடக்கிய விரிவான எழுத்து மூல பரிந்துரைகளை நீதி அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
வழக்கு தேக்கத்திற்கான முக்கிய காரணங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவையே. அவை தேவையான அளவு நிர்வாக, ஊழியர்கள் நியமிக்கப்படாமை, குறிப்பாக மொழிபெயர்ப்பு,கைரேகை அடையாளம், ஆய்வு கூடம்,ஆகிய துறைசார் பணியாளர் நியமனங்கள் இல்லாமை, செயல்திறன் ஆளணி குறைபாடுகள், போதிய பெளதிக வள பற்றாக்குறை, மற்றும் நடைமுறை தாமதங்களே தவிர,நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அல்ல.
குறிப்பாக, சட்டத்தரணி,இடதுசாரி சிந்தனையாளர், மற்றும் ஆளும் தேசிய மக்கள் சக்தி தலைமை குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க கூட இந்த முன்மொழிவுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியல் சார்பு இல்லாமல் சட்ட வல்லுநர் இணைந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அரசாங்கம், இனி எதிர்கட்சி அரசியல் என்று சொல்லி, அதன் பின் ஒளிய முடியாது.
'ஊழல் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும்' என்று யாரும் இங்கே கூறவில்லை. கூறவும் முடியாது. நான் ஒருபோதும் கூறவே மாட்டேன். ஊழல் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கபட வேண்டும். குற்றவாளிகள் சட்டத்திற்கு கட்டாயம் முகம் கொடுக்க வேண்டும்.
அமைச்சர் வசந்த சமரசிங்க,பிரதியமைச்சர் மகிந்த சமரசிங்க,கடுவெல மாநகர முதல்வர் ரஞ்சன் ஜயலால், மேலும் 300-க்கும் அதிகமான கொள்கலன் விவகாரம், நிலக்கரி கொள்வனவு ஊழல் விவகாரம், அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் காணாமல் போன விவகாரம் மற்றும் தற்போது இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன் நிலுவையில் உள்ள அரசாங்கத் தரப்புகளுக்கு எதிரான பல முறைப்பாடுகளும் விசாரிக்கப்பட்டு, கைதுகள், நடைபெற வேண்டும்.
'சம நீதி' என்பதே சட்ட ஆட்சியின் அடித்தளம். ஒருதலை பட்ச நீதி என்பது அரசியல் பழிவாங்கல். ஆனால், இங்கே பேசப்படும் விவகாரம் அதுவல்ல. அரசாங்கம் தன் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப,நீதித்துறை சுயாதீனத்தில் தலையிட முயலுகிறது என்பதே இன்று எம் முன் உள்ள விவகாரம். நீதித்துறை சுயாதீனம் என்பது நீதிமன்றங்கள் அரசியலமைப்பிற்கு மட்டுமே பொறுப்பு கூற வேண்டும் என்பதாகும். மாறாக அரசாங்கத்திற்கு பொறுப்பு கூற அல்ல.
இப்போது மற்றொரு முக்கியமான அரசியலமைப்பு சிக்கலும் எழுகிறது. அரசியலமைப்பு நிபுணர்களின் கருத்துப்படி, இந்த முன்மொழிவு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மட்டும் சட்டமாக முடியாது. பொதுஜன வாக்கெடுப்பும் அவசியமாக இருக்கலாம்.
விசித்திரமாக,பொதுசன வாக்கெடுப்பு அவசியமா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு, இந்த பதவிக்கால நீடிப்பால் நேரடியாக பயன்பெற உள்ள நீதிபதிகளுக்கே உள்ளது. இந்த முரண்பாடே அரசாங்கம் மக்களின் தீர்ப்பை பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.
இதற்காக முதலில் நீதிமன்ற தீர்ப்பைப் பெற வேண்டிய அவசியமின்றி, இந்த விவகாரத்தை நேரடியாக மக்கள் முன் வைக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில், அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பவர்கள் பற்றியும், மௌனமாக இருப்பவர்கள் பற்றியும் வரலாறு தீர்ப்பளிக்கும்.இந்த விவகாரம் தொடர்பில், பொதுஜன வாக்கெடுப்புக்கு போவோம். நண்பர் அநுர குமாரவுக்கு இது வரலாற்று திருப்புமுனை. ஒரு அக்கினி பரீட்சை என்று குறிப்பிட்டுள்ளார்.





