பிரித்தானியா மேலும் 430,000 டொலர்கள் நிதியுதவி
தமது நிதியுதவியானது மனிதாபிமான உதவி முகவரமைப்புக்கள் ஊடாக அனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்றடைந்திருப்பதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அதன் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்திருக்கிறது.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட 890,000 டொலர்கள் நிதிக்கு மேலதிகமாக மேலும் 430,000 டொலர்கள் நிதியுதவியை பிரித்தானியா வழங்கியுள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம், இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் ஏனைய மனிதாபிமானப்பங்காளிகள் ஊடாக உடனடி நிவாரண உதவிகள் சென்றடையும் வகையில் 890,000 டொலர் நிதியுதவியை வழங்குவதாகக் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமது நிதியுதவியானது மனிதாபிமான உதவி முகவரமைப்புக்கள் ஊடாக அனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்றடைந்திருப்பதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அதன் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்திருக்கிறது.
அத்தோடு அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் சுமார் 1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தாம் மேலதிக நிதியுதவியை வழங்கியிருப்பதாகவும், அதன்மூலம் பிரித்தானியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி 1.32 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்திருப்பதாகவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





