'மட்லீன் சுதந்திரக் கப்பல்' காஸாவை சென்றடைய இடமளியுங்கள்; கொழும்பில் வலியுறுத்தல்
இப்போராட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், பலஸ்தீன விடுதலை ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பலஸ்தீனத்தில் பதிவாகிவரும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஒத்திருப்பதாகவும், இப்பேரழிவைத் தடுப்பதற்கு பலஸ்தீனத்துக்கு எதிரான தமது ஒடுக்குமுறைகளை இஸ்ரேல் முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் எனவும் கொழும்பில் ஒன்றுகூடி வலியுறுத்தியுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள், இஸ்ரேலியப்படையினரால் நிறுத்தப்பட்டிருக்கும் 'மட்லீன் சுதந்திரக் கப்பல்' காஸாவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனக் கோரியுள்ளனர்.
சுழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடன் மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றியவாறு காஸாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்பலுக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலியப்படையினரால் அக்கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்கப்பல் விடுவிக்கப்பட்டு, காஸாவுக்கான அதன் பயணத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், இஸ்ரேலின் பிடிக்குள் இருந்து காஸாவை மீட்கவேண்டும் எனவும் வலியுறுத்தி இலங்கையில் இயங்கிவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினால் நேற்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், பலஸ்தீன விடுதலை ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் 'பலஸ்தீன விடுதலை', 'பலஸ்தீனம் பலஸ்தீனர்களுக்கே உரியது', 'நாம் பலஸ்தீனத்துடன் உடன்நிற்கிறோம்', 'பலஸ்தீன இனவழிப்பை நிறுத்துங்கள்', 'ஐக்கிய நாடுகள் சபையா? அல்லது நியாயமற்ற நாடுகள் சபையா?', 'இலங்கையே, சரியான தரப்பின் பக்கம் நில்' என்பன உள்ளடங்கலாக பலஸ்தீனத்துக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சார்பில் கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், பலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஒத்திருப்பதாகவும், இப்பேரழிவை தடுப்பதற்கு பலஸ்தீனத்துக்கு எதிரான தமது ஒடுக்குமுறைகளை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்





