வட, கிழக்கின் பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு தடை: சாணக்கியன் எம்.பி.
நாகப்பட்டினத்திலிருந்து வந்த கப்பல் பயணிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தது, பேருந்தில் ஆசனமின்றிப் பயணிக்க வைத்தது போன்றவை இதற்கு உதாரணமாகும்.
வடக்கு கிழக்கிலே எவ்வித பொருளாதார மேம்பாட்டு விடயங்களும் கட்டியெழுப்பப் படக்கூடாது, வடக்கு கிழக்கு மக்கள் அனைத்து விடயங்களுக்கும் தென்னிலங்கையை நம்பி, தென்னிலங்கை அரசை மாத்திரம் நம்பி வாழ வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இனவாதமான மனநிலையிலே இந்த அரசாங்கம் செயற்படுகிறது என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு கிழக்கின் பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய அரசாங்கம் திட்டமிட்ட இனவாதத்துடன் தடையாகச் செயற்படுகிறது. வடக்கு கிழக்கு மக்கள் அனைத்து விடயங்களுக்கும் தென்னிலங்கையையும், தென்னிலங்கை அரசையும் நம்பி வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்
வடக்கு கிழக்கில் பொருளாதார அபிவிருத்திதான் இளைஞர்களின் முக்கிய தேவையாக உள்ளது. வட,கிழக்கில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவதற்குக் காரணம், இந்த அரசாங்கத்திடம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவோ, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ கூடிய சூழல் இல்லை என்பதாலாகும்.
ஒரு தொழில் முயற்சியை எடுத்தாலும், ஏற்றுமதிக்கு கொழும்பு துறைமுகம் அல்லது குறிப்பிட்ட கொள்ளளவு கொண்ட பலாலி விமான நிலையம் மட்டுமே உள்ளது. சர்வதேசத் தொடர்புகள் மூலமே வடக்கு கிழக்கை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப முடியும்.
நல்லாட்சிக் காலத்தில் பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன. காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் 63 மில்லியன் டொலர்கள் நிதி வழங்கியும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதை நிராகரித்தது மனவேதனை அளிக்கிறது.
வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை உயர்த்த, காங்கேசன்துறை துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்து, அங்கிருந்து மன்னார் மற்றும் திருகோணமலைக்கு அதிவேகப் பாதைகள் உருவாக்கப்பட வேண்டும்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் அண்மையில் ஏற்பட்ட பயணிகளின் சிரமங்களை பார்க்கின்றபோது, இது வடக்கு கிழக்கில் எந்தப் பொருளாதார மேம்பாடும் வரக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்படும் செயல் என்பது தெளிவாகிறது.
நாகப்பட்டினத்திலிருந்து வந்த கப்பல் பயணிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தது, பேருந்தில் ஆசனமின்றிப் பயணிக்க வைத்தது போன்றவை இதற்கு உதாரணமாகும்.
பலாலிக்கு அதிக விமானங்கள் வருவதற்கு இடமில்லை என்று கூறி, அடுத்த ஆறு மாதங்களில் இலங்கைக்கு வரவிருந்த மேலதிக விமானங்களைத் தடுத்திருப்பது மறைமுக இனவாதமாகும். பலாலி விமான நிலையத்தை புனரமைத்தால் மேலதிக விமானங்களை அங்கே இறக்க முடியும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று விடயங்களிலும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையும், துரோகத்தையுமே இழைத்துள்ளது. மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தி, இந்த விடயங்களைத் தமிழ் மக்களே கையாளக்கூடிய சூழல் வர வேண்டும் என்றார்.





