மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் யோசனை: அமைச்சர் சந்தன அபேரத்ன
மாகாணசபைத்தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான தனிநபர் பிரேரணை அண்மையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மாகாணசபைத்தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான யோசனையொன்றை தாம் அரசாங்கத்தின் சார்பில் முன்வைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத்தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான தனிநபர் பிரேரணை அண்மையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அப்பிரேரணை 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தன்னால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணைகளின் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதனால் அப்பிரேரணை குறித்து மீண்டும் புதிதாக ஆராயவேண்டிய அவசியமில்லை என்றும், ஆகவே அதனை பாராளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற சபைகள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தின்போது மாகாணசபைத்தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்து எதிர்ப்பு வெளியிடவேண்டிய அவசியமில்லை எனவும், மாறாக அதற்கான அங்கீகாரத்தை விரைந்து வழங்குமாறும் அமைச்சர் சந்தன அபேரத்னவிடம் சாணக்கியன் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், அத்தனிநபர் பிரேரணை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் பிரேரணையொன்றை முன்வைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.





