மீனவர்களுக்கு மானியங்களை வழங்க நடவடிக்கை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இறங்குதுறைகள் மற்றும் அணைக்கட்டுகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
'வளமான நாடு அழகான வாழ்க்கை'' என்ற கொள்கை திட்டத்துக்கமைய மீனவர் சமுகத்தின் பிரச்சினைகளை தீர்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மீன்பிடி கைத்தொழியை மேம்படுத்த மானியங்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-10-2025 அன்று நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியங்கள் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை வேகமாக வழங்க நடவடிக்கை எடுத்தோம். உள்ளூர் மீன்பிடி துறையில் டீசல் எரிபொருள் பயன்படுத்தும் 5750 படகுகளும் மண்ணெண்ணெய் பயன்படுத்தும் 27530 படகுகளும் உள்ளன. அத்துடன் எரிபொருள் பயன்படுத்தப்படாத 17000 சிறிய படகுகளும் உள்ளன. அதேபோன்று மீன்பிடி துறையில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபடுகின்றனர்.
''வளமான நாடு அழகான வாழ்க்கை'' என அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி மீனவர் சமுகத்தின் பிரச்சினை தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது மக்கள் எரிபொருள் விலையேற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் எரிபொருள் விலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்களுக்கு எரிபொருள் மானியங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி டீசல் படகுகளுக்கு 6 மாதங்களுக்காக 3 இலட்சம் ரூபாவை அதிகப்படியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்ணெய் படகுகளுக்கு 6 மாதங்களுக்கு 9375 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. இயந்திர மீன்பிடி படகுகளுக்காக மானியங்களை வழங்கி மீன்பிடி துறையை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை நிர்ணயத்திற்கமைய மேலும் எரிபொருள் மானியத்தை வழங்கும் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுக்காக பெருமளவு வேலைத்திட்டங்களை செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறங்குதுறைகள் மற்றும் அணைக்கட்டுகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதேவேளை நுண்நிதி கடன்களால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளனர். பெண்களே அதிகளவில் இதில் சிக்கியுள்ளனர். வன்னி மாவட்டத்திலேயே அதிகளவான பெண்கள் நுண்நிதி கடன்களை மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால் இது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.





