அரசியலமைப்புக்கான 22 ஆவது உத்தேச திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
5 ஆவது பந்தியைத் திருத்தியமைப்பதன் ஊடாக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்படும்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குரிய அரசியலமைப்புக்கான 22 ஆவது உத்தேச திருத்தச் சட்டமூலம் நேற்று வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பணிப்புரைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அரசியலமைப்பின் 107 ஆம் உறுப்புரையின் 5 ஆவது பந்தியைத் திருத்தியமைப்பதன் ஊடாக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்படும்.
இருப்பினும் 'பிரதம நீதியரசரின் ஓய்வுபெறுவதற்கான திகதி, ஒன்றில் பிரதம நீதியரசர் 67 வயதினை அடைகின்ற திகதியில் அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து 6 வருடகாலம் நிறைவடைகின்ற திகதியில், எது முதலாவதாக நிகழ்கின்றதோ அந்த திகதியாக இருத்தல் வேண்டும்' என இச்சட்டத்திருத்தமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று இத்திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம், அரசியலமைப்பின் 137 ஆவது உறுப்புரையில், மேன்முறையீட்டு நீதிமன்றமானது மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரையும் 6 பேருக்குக் குறையாததும், 19 பேருக்கு மேற்படாததுமான வேறு நீதிபதிகளையும் கொண்டிருக்கவேண்டும் என்பதில் '19 பேருக்கு மேற்படாத' என்ற சொற்கள் '24 பேருக்கு மேற்படாத' எனத் திருத்தியமைக்கப்படும்.





